கல்வியியல் ஆசிரியர் கல்வி (பி.எட்) பயில ஆண்டு கட்டணம் 30 ஆயிரம் ரூபாய் என தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் துவங்கப்பட்ட பல்கலைக்கழகம் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே துவங்கப்பட்டுள்ளது. துணைவேந்தர், உதவியாளர், டிரைவர் மற்றும் வாட்ச்மேன் என நான்கு பேர் மட்டுமே இதுவரை பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதியே அதனை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் சகோதரி முறைகேடாக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய இயலாத மாணவர்கள் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வியியல் ஆசிரியர் கல்வி (பி.எட்) பயில ஆண்டு கட்டணம் 30 ஆயிரம் ரூபாய் என தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நெருக்கடி முடிந்த பிறகு முதலமைச்சருடன் கலந்து பேசி கல்லூரி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது. கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கான இந்த விண்ணப்ப பதிவு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 48ம், பதிவுக் கட்டணமாக ரூபாய் 2ம் என்று மொத்தம் ரூபாய் 50 செலுத்த வேண்டும். இதில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் தேவையில்லை. பதிவு கட்டணமாக ரூபாய் 2 செலுத்தினால் போதுமானது. இந்த கட்டணத்தை விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையம் மூலமாக செலுத்தினால் போதும். அவ்வாறு செலுத்த முடியாத மாணவர்கள் தங்களுக்கான உதவி மையங்கள் மூலமாக the director, directorate of collegiate education, Chennai- 6 என்ற பெயரில் இன்றைய தேதி அல்லது அதற்கு பிந்தைய தேதிகளில் பெற்ற வங்கி வரைவோலையாகவோ அல்லது நேரடியாக செலுத்தலாம்.
மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 044-28260098, 044-28271911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்..!