YASASVI எனப்படும் இந்தியாவின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகையை வழங்கும் நுழைவுத் தேர்வு அண்மையில் நடைபெற்ற நிலையில், தேர்வு எழுதியோருக்கான உத்தேச விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. விடைகளை ஆட்சேபிக்க இன்று (அக்.7) கடைசித் தேதி ஆகும். 


இந்தியாவின்‌ இளைய சாதனையாளர்களுக்காக பிரதமர்‌ கல்வி உதவித்‌ தொகை திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இது 9 வது வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு சேர விரும்பும் மாணவர்களுக்கான உதவித்‌ தொகை திட்டம்‌ ஆகும்‌. இந்த மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது. வருமானச் சான்றிதழை மாணவர் சேர்க்கையின்போது பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.


இந்தியாவின்‌ இளைய சாதனையாளர்களுக்காக பிரதமர்‌ கல்வி உதவித்‌ தொகையாக, ஆண்டுதோறும் ரூ.4,000 வழங்கப்படும். 


என்ன தகுதி?


இந்தத் திட்டத்தில் இதர பிற்பட்டோர் (OBC), பொருளாதார ரீதியாக பிற்பட்டோர்‌ (EBC), சீர்‌ மரபினர்‌ (DNT) ஆகிய மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டு தேர்வை எழுதினர்.


தேர்வு மொழி


இந்த தேர்வுக்கான கேள்வித்‌ தாள்கள் இந்தியிலும்‌, ஆங்கிலத்திலும்‌ மட்டுமே கேட்கப்பட்டன. 9ஆம் வகுப்பில் சேர, என்சிஇஆர்டி 8ஆம் வகுப்புப் பாடத் திட்டமும், 11ஆம் வகுப்பில் சேர, என்சிஇஆர்டி 10ஆம் வகுப்புப் பாடத் திட்டமும் கணக்கில் கொள்ளப்பட்டு, கேள்விகள் கேட்கப்பட்டன. 


தேர்வு மையங்கள்


தமிழ்நாட்டில் சென்னை, சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் திட்டத்தின்படி, தகுதி வாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதித்‌ தேர்வு 25.09.2022 அன்று நடைபெற்றது. குறிப்பாக 3 மணி நேரத்துக்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. 






இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 5ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது. மாணவர்கள் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொண்டனர்.


இந்த நிலையில், தேர்வு எழுதியோருக்கான உத்தேச விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. விடைகளில் ஏதேனும் ஆட்சேபனைகள்/ தவறுகள் இருப்பதாகத் தேர்வர்கள் கண்டறிந்தால் அவற்றை ஆட்சேபிக்கலாம்.


விடைகளை ஆட்சேபிக்க இன்று (அக்.7) கடைசித் தேதி ஆகும். 


ஆட்சேபிப்பது எப்படி?


மாணவர்கள் https://yet.nta.ac.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும். 


இதில், https://yet.nta.ac.in/c/login/ என்ற இணைப்பை தேர்ந்தெடுக்கவும். 


மாணவர்கள் மேற்கண்ட முகவரியில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, விடைத்தாளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 


தொலைபேசி எண்கள்: 011 4075 9000 அல்லது 011 6922 7700