உயர் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர, ஜூலை 1 முதல் பிஎச்.டி. கட்டாயமில்லை என்றும் நெட்/ ஸ்லெட் ஆகிய தகுதித் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் எனவும் யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு உயர் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியராகச் சேர முனைவர் படிப்பு கட்டாயம் என்று யுஜிசி அறிவித்தது. ஏற்கெனவே முனைவர் படிப்பு (பிஎச்.டி.) படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு 3 ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. 2021- 22ஆம் ஆண்டு முதல், உயர் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர பிஎச்.டி. கட்டாயம் என்று அறிவிப்பு வெளியானது.
எனினும் கொரோனா பெருந்தொற்று, அதைத் தொடர்ந்த ஊரடங்கு ஆகியவற்றால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவர்களால், பிஎச்.டி. படிப்பை முடிக்க முடியவில்லை என்பதால், சில ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது இதை ஏற்று, பல்கலைக்கழக மானியக் குழுவும் விலக்கை அளித்தது.
இந்த நிலையில் உயர் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர, ஜூலை 1 முதல் பிஎச்.டி. கட்டாயமில்லை என்றும் நெட்/ ஸ்லெட் ஆகிய தகுதித் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் எனவும் யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், நெட் (NET) எனப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு அல்லது செட் (SET) அல்லது ஸ்லெட் (SLET) எனப்படும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பிஎச்.டி. தேர்ச்சி ஆப்ஷனலாக மட்டுமே இருக்கும். இந்த நடைமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.