ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க இடைக்கால குழு அமைக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
’’சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்தி தனது தலைமையில் தனியார் நிறுவனம் தொடங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், பட்டியலினத்தவர் வன்கொடுமை சட்டத்தின்படியும் கைது செய்யப்பட்டு, இடைக்கால பிணையில் வந்துள்ள அதன் துணைவேந்தர் ஜெகநாதன் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.
தனிச்சலுகை காட்டப்படுவது ஏன்?
முந்தைய காலங்களில் கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஆகியோர் கைது செய்யப்பட்ட போது, உடனடியாக அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரத்தில் மட்டும் அவருக்கு தனிச்சலுகை காட்டப்படுவது வியப்பளிக்கிறது.
மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்குவதற்கான துணைவேந்தர் போன்ற உயர்பதவிகளில் அப்பழுக்கற்றவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தலைமறைவாக உள்ள பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்க வேண்டும்
துணைவேந்தரும், பதிவாளரும் இல்லாத சூழலில் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?
பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு முறைகேடு புகார்கள் வந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் வர்த்தக ரீதியான நிறுவனம் தொடங்கியதாக புகார் வந்தது.
இதன் அடிப்படையில் பெரியார் பலகலை கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனை டிசம்பர் 26ஆம் தேதி சேலம் மாநகர் கருப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் ஜெகநாதன் தனது நண்பர்களுடன் இணைந்து நிறுவனம் ஒன்றை தொடங்கியதாக புகார் எழுந்தது. அரசு ஊழியர் வர்த்தகம் சார்ந்த நிறுவனத்தை தொடங்க அனுமதி இல்லாத நிலையில் ஜெகநாதன் நண்பர்களுடன் இணைந்து பங்குதாரராக இருந்துள்ளார். இது உறுதி செய்யப்பட்டதால் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.
மேலும், போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டதாகவும் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் துணைவேந்தர் ஜெகநாதன் விடுவிக்கப்பட்டார்.