பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக  பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற நிகழ்ச்சிக்குப் பதிவு செய்யவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 5-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள mygov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். வழக்கமாக இதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். 

நேரடியாக நடைபெற்ற பரிக்‌ஷா பே சார்ச்சா

முதன்முறையாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியான “பரிக்‌ஷா பே சார்ச்சா 1.0”, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லியில் உள்ள டால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களுடனான “பரிக்‌ஷா பே சார்ச்சா 2.0” கலந்துரையாடல் நிகழ்ச்சியும் அதே மைதானத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்றது.

மூன்றாவது ஆண்டாக பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற “பரிக்‌ஷா பே சார்ச்சா 2020” கலந்துரையாடல் நிகழ்ச்சியும் டால்கடோரா மைதானத்தில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது.

இந்த சூழலில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற “பரிக்‌ஷா பே சார்ச்சா 2021” நிகழ்ச்சியில் உலகெங்கும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள அவர், ''பொதுத் தேர்வுகள் விரைவில் வர உள்ளன. அதனால், பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியும் விரைவில் நடைபெற உள்ளது. நம்முடைய ஆற்றல் மிகுந்த இளைஞர்களுடன் கலந்துபேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். அவர்களின் சவால்கள், லட்சியங்களைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

சர்வதேசக் கல்வியின் போக்குகளை ஆராயவும் நேரம் வாய்த்துள்ளது. அழுத்தம் இல்லாத தேர்வுகளைப் பற்றிப் பேசுவோம். மீண்டும் நம்முடைய வீரர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்களுக்கு ஆதரவு தருவோம். PPC2022-க்கான முன்பதிவை மேற்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று பிரதமர் மோடி  பதிவிட்டுள்ளார். 

இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.