கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முதலூர் கிராமத்தை சேர்ந்த செங்கல் அறுக்கும் தொழிலாளி லோகநாதன் (35). இவருடைய மனைவி பேபி (33). இவர்களுக்கு சாரதி (14), கார்த்தி (9) என்ற 2 மகன்களும், சத்யா (11) என்ற மகளும் உள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் திருக்கோவிலூருக்கு சென்று பொங்கல் பண்டிகைக்கான மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கி வந்தனர். பின்னர் இரவு கணவன், மனைவி இருவரும் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 11 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்த லோகநாதன் மனைவியை வீ்ட்டின் மாடிக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது லோகநாதன் கடந்த சில மாதங்களாக உனது நடத்தை சரியில்லை என்று மனைவியை திட்டினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு முற்றியது. அப்போது ஆத்திரம் அடைந்த லோகநாதன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத அவர், பேபியின் வயிற்றைக் கிழித்து குடலை எடுத்து வெளியே போட்டார். அப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பேபி, துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் எங்கே போலீசில் மாட்டிக் கொள்வோமோ? என்ற பயத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த லோகநாதன் விஷத்தை குடித்து விட்டு வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் தூக்கில் தொங்கினார். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக லோகநாதனின் தாய் வந்தார். அங்கு தனது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லோகநாதனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதன் பிறகுதான் லோகநாதன் அவரது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு குடலை பிடுங்கிய கொடூர சம்பவமும், இதில் போலீசுக்கு பயந்து அவர் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த பேபியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை அறுத்து கொன்று குடலை பிடுங்கி வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் முதலூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.