Pariksha Pe Charcha 2025: தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடுவது குறித்து, பிரதமர் மோடி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.


மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி


தேர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கும் நோக்கில், பரிக்‌ஷா பே சர்ச்சா அதாவது தேர்வுகள் மீதான விவாதம் என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில் எட்டாவது முறையாக பிரதமர் மோடி மாணவர்களுடன் இன்று கலந்துரையாட உள்ளார். காலை 11 மணியளவில் தொடங்க உள்ள நிகழ்ச்சியில், மாநில/யூனியன் பிரதேச வாரிய அரசுப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயாக்கள், சைனிக் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 36 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.



இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில்,  அவர் பள்ளி குழந்தைகளுடன் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  மேலும் அந்த பதிவில், "நமது #ExamWarriors தேர்வு மன அழுத்தத்தைக் கடக்க உதவுவோம். நாளை, பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 11 மணிக்கு 'பரிக்ஷா பே சர்ச்சா'வைப் பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


நட்சத்திர விருந்தினர்கள்:


இந்த ஆண்டு, பரிக்ஷா பே சர்ச்சா ஏழு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் முக்கிய பிரபலங்கள் பங்கேற்று, தங்களது வாழ்க்கை மற்றும் கற்றல் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அதன்படி,



  • விளையாட்டு மற்றும் ஒழுக்கம் குறித்த அத்தியாயத்தில், எம்.சி. மேரி கோம், அவனி லேகாரா மற்றும் சுஹாஸ் யதிராஜ் ஆகியோர் இலக்கு நிர்ணயம், மீள்தன்மை மற்றும் மன அழுத்த மேலாண்மை பற்றி விவாதிக்க உள்ளனர்

  • மனநலப் பிரிவில், தீபிகா படுகோன் உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் சுய வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க உள்ளார்

  • ஊட்டச்சத்து நிபுணர்களான ஷோனாலி சபர்வால், ருஜுதா திவேகர் மற்றும் ரேவந்த் ஹிமத்சிங்க ஆகியோர் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு பற்றிப் பேச உள்ளனர்

  • கௌரவ் சவுத்ரி (தொழில்நுட்ப குருஜி) மற்றும் ராதிகா குப்தா ஆகியோர் கல்வியில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் நிதி கல்வியறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பார்கள்

  • விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோர் மாணவர்களை நேர்மறையைத் தழுவி எதிர்மறை எண்ணங்களை நிர்வகிக்க ஊக்குவிக்க உள்ளனர்

  • சத்குரு மன தெளிவு மற்றும் கவனம் செலுத்துவதற்கான நடைமுறை மனப்பாங்கு நுட்பங்களை அறிமுகப்படுத்த உள்ளார்


சிறப்பு அத்தியாயம்:


சிறப்பு அத்தியாயத்தில் ஏற்கனவே தேர்வில் அசத்திய மாணவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்வர். உதாரணமாக  UPSC, IIT-JEE, CLAT, CBSE, NDA, ICSE மற்றும் கடந்த PPC பங்கேற்பாளர்களின் முதலிடம் பெற்றவர்கள், தேர்வு மீதான விவாதம் எவ்வாறு தங்கள் தயாரிப்பு மற்றும் மனநிலையை வடிவமைத்தது என்பதைப் பகிர்ந்து கொள்வார்கள். பிரதமர் மோடியின் மாணவர்களுக்கான இந்த முயற்சியின் 8வது பதிப்பான 'பரிக்ஷா பே சர்ச்சா' அமர்வு திங்கட்கிழமை நடைபெறும். இது ஏற்கனவே நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் 5 கோடிக்கும் அதிகமான பங்கேற்பாளர்களுடன் சாதனை படைத்துள்ளது. இன்றைய நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி 5 நாள் பயணமாக, ஃப்ரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.