தமிழகத்திலேயே முதல்முறையாக, பரமத்தி அரசு தொடக்கப் பள்ளியில் பெற்றோர்களுக்கு எனத் தனி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. 


வாசிப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையான குணங்களில் ஒன்று. அந்த வாசிப்பு காலத்திற்கேற்ப பாட்டு, நாடகம், எழுத்து என வெவ்வேறு வடிவங்களுக்கு மாறினாலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 


அரசுப் பள்ளிகளில், குறிப்பாகத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நூலகம் என்பதே அரிதாக உள்ள சூழலில், கரூர் அருகே க.பரமத்தி அரசு தொடக்கப் பள்ளியில் பெற்றோர்களுக்கெனத் தனி நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. 


இந்தப் பள்ளியில் ஏற்கெனவே 2000-க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் குழந்தைகளுக்கான நூலகம் செயல்பாட்டில் உள்ள நிலையில், தற்போது பெற்றோர் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. காலையில் குழந்தைகளை அழைத்துவந்து பள்ளியில் விட்டுவிட்டு, மாலையில் திரும்ப அழைத்துச் செல்லக் காத்திருக்கும் பெற்றோர்களிடையே வாசிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்த இந்தப் புதிய ஏற்பாடு கைகொடுக்கும் என்று நம்புவதாகச் சொல்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்.




சர்வதேசப் பள்ளி என்ற அங்கீகாரத்துடன் கம்பீரமாக இயங்கி வரும் இந்த தொடக்கப் பள்ளியில், ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி, கராத்தே, யோகா, ஓவியம், இசை, நடனம், பாட்டு ஆகிய பயிற்சிகள் இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன. ஊர் மக்களின் ஆதரவோடு சுமார் ரூ.40 லட்சம் திரட்டப்பட்டு பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், தண்ணீர்க் குழாய்கள், கழிப்பறை, நூலகம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.


பள்ளி மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளால் பள்ளிக்கு, சர்வதேச தரச் சான்று ISO 9001:2015 கிடைத்துள்ளது.


தன்னுடைய இரண்டு மகள்களையும் அரசுப் பள்ளியிலேயே படிக்க வைத்த ஆசிரியர் செல்வக்கண்ணன், தன்னுடைய ஊதியத்தில் இருந்து மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை, காலணி, சாக்ஸ், பெல்ட், அடையாள அட்டை ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து வருகிறார். பள்ளிக்கு சுற்றுச்சுவர், சிமெண்ட் தரை ஆகியவற்றிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். 


க.பரமத்தி அரசுத் தொடக்கப் பள்ளியில் எஸ்எம்சி எனப்படும் பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புற இயங்கி வருகிறது. தமிழகப் பள்ளிக் கல்வித்துறையே எஸ்எம்சி செயல்பாடுகளைக் கண்டு, ஆசிரியர் செல்வக்கண்ணனை அழைத்து பள்ளி மேலாண்மைக் குழு சிறப்பாக இயங்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டுள்ளது. 



இந்நிலையில் தற்போது முன்னுதாரண முயற்சியாகப் பெற்றோர்களுக்கான நூலகம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏபிபி செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆசிரியர் செல்வக்கண்ணன், ''பள்ளிக்காகத் தன்னலமில்லாமல், தொடர்ந்து செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்காக முதலில் தனியாக ஓர் அறையை ஒதுக்க முடிவெடுத்தோம். எனினும் அதை அவர்கள் முழு நேரமும் பயன்படுத்தப் போவதில்லை. பிற நேரங்களில் அந்த அறையை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தோம். பின்னர் அதையே நூலகமாக மாற்றிவிட்டால் என்ன என்று தோன்றியது. 


எங்கள் பள்ளியில் படிக்கும் 218 மாணவர்களின் அம்மாக்களில் பெரும்பாலானோர் இல்லத்தரசிகள். இதில் 70% பேர் குறைந்தது பள்ளிப் படிப்பை முடித்திருக்கின்றனர். அவர்கள் தினமும் மாலையில் 3.30 மணிக்கே பள்ளிக்கு வந்துவிடுகின்றனர். 4.10 மணிக்குப் பள்ளி வகுப்புகள் முடியும் வரையில் காத்திருக்கின்றனர். அவர்களின் நேரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாமே என்றும் நினைத்தோம். அந்த வகையில் பெற்றோர்களுக்குத் தனி நூலகம் அமைக்க முடிவெடுத்தோம். 


தினந்தோறும் நான் வாங்கும் செய்தித்தாள்களை, இங்கு கொண்டு வந்து வைக்கத் திட்டமிட்டுள்ளேன். அத்துடன் பெற்றோருக்கான புத்தகங்கள், வார இதழ்களை வாங்கி வைக்கவும் முடிவெடுத்துள்ளோம். வாசிப்பு குறைந்துகொண்டே இருக்கின்ற சூழலில், அதை நோக்கி மக்களை நகர்த்துவதற்கான முயற்சி இது. 



வாசிப்பை ஊக்குவிக்க, அதுதொடர்பான போட்டிகள் வைக்கவும் திட்டமிட்டுள்ளோம். வாசிக்கத் தொடங்கிவிட்டால், அது பழக்கமாக மாறும். அதன்மூலம் குழந்தைகளுக்கும் வாசிப்பை வழக்கமாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நூலகத்திற்கு நூல்கள் வழங்க விரும்புபவர்கள் தாராளமாக வழங்கலாம். ரூ.500 மற்றும் அதற்கு அதிகமான மதிப்பில் புத்தகங்கள் வழங்குவோருக்குப் பள்ளி சார்பில், பாராட்டுச் சான்றிதழ் வழங்க இருக்கிறோம்.


வாடிக்கையாளர்கள்தான் கடவுள் என்பார் காந்தி. அந்த வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களாகிய எங்களுக்குப் பெற்றோர்கள்தான் கடவுள். அவர்களைக் கால்கடுக்கக் காத்திருக்க வைப்பதற்குப் பதிலாக, பயனுள்ள வகையில் நேரம் செலவிட வைப்பது எங்களுக்கும் மனநிறைவைத் தரும்'' என்று புன்னகைக்கிறார் ஆசிரியர் செல்வக்கண்ணன்.