3, 6 மற்றும் 9 ஆம் வகுப்பு அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு PARAKH தேசிய அடைவு ஆய்வு (என்ஏஎஸ்) தேர்வு நாளை நடைபெறும் நிலையில், ஃபெஞ்சல் புயலால் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் (டிச.4) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகினர். இந்த நிலையில் தேர்வு உடனே நடத்தப்படுவது அவசியமா என்று கேள்வி எழுந்துள்ளது.
என்ன தேர்வு? எதற்கு?
2024 -25 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3, 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணக்கர்களுக்கு தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கு மாவட்ட அளவில் சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3, 6 மற்றும் 9 வகுப்பு மாணவர்களுக்கு, PARAKH தேசிய அடைவு ஆய்வு (என்ஏஎஸ்) தேர்வு 04.12.2024 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை மாவட்ட அளவில் கண்காணிக்க 33 மாநில அளவிலான அலுவலர்களை சிறப்பு பார்வையாளர்களாக நியமனம் செய்ய அரசின் அனுமதி வேண்டி, எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.
38 மாவட்டங்களிலும் சிறப்புப் பார்வையாளர்கள் நியமனம்
இதன்படி 33 மாநில அலுவலர்கள் 38 மாவட்டங்களிலும் சிறப்புப் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பனுக்கு செங்கல்பட்டு மாவட்டம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமாவுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமிக்கு சென்னை மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் லதாவுக்கு கடலூர் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உஷாராணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவர்களால் எப்படி பங்கேற்க முடியும்?
இந்த நிலையில், ’’கன மழையால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களிலும் தேர்வு நடத்துவது சரியா? அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் எப்படி பங்கேற்க முடியும்?’’ என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் ’’மழை பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலையை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று நினைக்காமல் தேர்வை நடத்துவதா? இது நியாயமா?’’ என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.