பெற்றோருடன், சொந்தங்களுடன், நண்பர்களுடன் அமர்ந்து காஃபி குடித்திருப்போம். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர், மாவட்ட ஆட்சியருடன் ஒன்றாக அமர்ந்து காஃபி அருந்தி இருக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் காஃபி வித் கலெக்டர் என்ற பெயரில் புதுமையான முறையில், மாவட்ட ஆட்சியர் - மாணவர்கள் இடையேயான சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.  


விருதுநகர் கிழக்குப் பகுதியில் பின்தங்கிய நரிக்குடி பகுதியில் இருந்து 20 மாணவர்கள் ஆட்சியரை, அவரது அலுவலகத்தில் நேற்று (ஜன.7) சந்தித்துப் பேசினர். அங்கு ஆசிரியர்களோ, கல்வி அதிகாரிகளோ, அலுவலக ஊழியர்களோ இல்லாத நிலையில் 1 மணி நேரத்துக்கு மேல், ஆழமான கேள்வி - பதில்களுடன் இந்தச் சந்திப்பு நீடித்தது. 


இந்த அனுபவத்தை 'ஏபிபி' செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டார் ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி.


''டிசம்பர் கடைசி வாரத்தில் கல்வித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை மேற்கொள்ளும்போது, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தொடர்ந்து அவர்களுடன் பேசலாமே என்று தோன்றியது. ஓர் ஆட்சியராக அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு செய்ய முடியாது. சென்றாலும், மாணவர்கள் அனைவருடனும் பேசுவது கடினம். அதனால் ஒவ்வொரு வாரமும் 1 மணி நேரம் ஒதுக்கி, அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்துப் பேச முடிவெடுத்தேன். அதை காஃபி வித் கலெக்டர் என்ற நிகழ்வாக மாற்றினோம். நேற்று (ஜன.7) முதல்முறையாக மாணவர்களைச் சந்தித்துப் பேசியும்விட்டேன்'' என்கிறார் விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டி.




செறிவான உரையாடல்


சந்திப்பு எப்படி இருக்கும் என்று தயக்கத்துடனேயே திட்டமிட்டுள்ளார். ஆனால் மாணவர்களின் செறிவான உரையாடல், அவரை அடுத்தடுத்த வார நிகழ்வுகளைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்ற தைரியத்தை அளித்துள்ளது. 


கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டதற்கு, ''பிரமாதமாக உள்ளார்கள். நான் சந்தித்த 20 பேருக்குமே தெளிவான சிந்தனை, கனவு இருக்கிறது. எதிர்காலத்தில் வழக்கறிஞர், ஐஏஎஸ், மருத்துவர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு நபர் ஆக வேண்டும் என்று யோசிக்கிறார்கள். சமீபத்திய தொழில்நுட்பங்களை அறிந்து வைத்துள்ளார்கள். அவர்கள் யாருமே, தாங்கள் பின்தங்கிய பின்னணி என்பதுபோல எதையும் நினைத்துக் கவலைப்படவில்லை. அவர்கள் அனைவருக்குமே படிப்புடன் கூடுதலாக ஒரு திறமை இருப்பதையும் உணர்ந்தேன். 


நிரம்பி வழிந்த பாசிட்டிவிட்டி, நம்பிக்கை


கொரோனா காலகட்டத்திலும் அவர்களிடையே ஆற்றலையும், அறிவுக் கூர்மையையும் உணர முடிகிறது. ஒரு மாணவி, உடனடியாக அங்கேயே பாட்டு ஒன்றை எழுதிப் பாடினார். விவசாயத்தில் ஒரு மாணவியும், கேரம்போர்ட், சதுரங்கத்தில் சில மாணவர்களும் தனிச்சிறப்புடன் இருந்தனர். எல்லோரிடமும் நிறைய பாசிட்டிவிட்டியும் நம்பிக்கையும் நிரம்பி வழிந்தது. அவர்கள் கேட்ட கேள்விகள் அத்தனை நுட்பமாகவும், ஆழமாகவும் இருந்தன. பதில் சொல்ல சில நேரங்களில் திணறிவிட்டேன்'' என்றார் ஆட்சியர் மேகநாத ரெட்டி.




ஐஏஎஸ் ஆன பிறகு தன்னுடைய லட்சியம் என்னவாக இருக்கிறது?, தான் சந்தித்த அவமானம் பற்றியும் அதை எதிர்கொண்டு வந்தது குறித்தும் மாணவர் ஒருவர் தன்னிடம் கேள்வி கேட்டதாகக் கூறியவர், அந்த சம்பவத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ''6வது படிக்கும்போது பேச்சு, கட்டுரை, ஓவியம் என எல்லா விதமான போட்டிகளிலும் கலந்துகொள்வேன். ஆனால் தோல்வி மட்டுமே பரிசாகக் கிடைத்தது. ஓர் ஆசிரியர், 'எல்லாவற்றிலும் இந்தப் பையன் கலந்துக்கறான். ஆனா பங்கேற்பு சான்றிதழ் மட்டும்தான் வாங்கிட்டு வர்றான்!' என்றார். அப்போது மிகவும் அவமானமாக, வேதனையாக இருந்தது. வீட்டில் அப்பா அளித்த ஊக்கத்தாலும், விடாமுயற்சியாலும் 9-ம் வகுப்பில் இருந்து தொடர்ந்து வெற்றிகளைப் பெற ஆரம்பித்தேன். இந்த சொந்த அனுபவத்தை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.  


மாணவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று நினைப்பதால் நேரம் ஒதுக்க முடிகிறது. இந்தச் சந்திப்பால் மாணவர்கள் உத்வேகம் பெறுவர். பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் இது பெருமை அளிக்கும்'' என்கிறார் ஆட்சியர் மேகநாத ரெட்டி. 


தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்தும், குறைந்தபட்சம் ஒரு மாணவரைச் சந்திக்க ஆட்சியர் திட்டமிட்டுள்ளார். படிப்பில் சிறந்து விளங்குபவர்கள் மட்டுமல்லாமல், விளையாட்டு மற்றும் பேச்சு, எழுத்து, ஓவியம் உள்ளிட்ட கலை சார்ந்து இயங்கும் மாணவர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வர்.


 






போய் வீட்டுப்பாடத்தை செய்யுங்க தம்பி!


அண்மையில் விருதுநகர் மாவட்டத்தில், 'திருக்கார்த்திகைக்கு விடுமுறை உண்டா?' என்று ஆட்சியரை ட்விட்டரில் டேக் செய்த மாணவரிடம், பெற்றோருடன் வந்து தன்னைப் பார்க்குமாறு பதிலளித்தார். மழை விடுமுறை குறித்துக் கேள்வி கேட்ட மற்றொரு மாணவரிடம், 'போய் வீட்டுப்பாடத்தை செய்யுங்க தம்பி!' என்று பதிலளித்தது வைரலானது. 


இவ்வாறு நகைச்சுவையாக ட்வீட் செய்வது குறித்துப் பேசிய ஆட்சியர் மேகநாத ரெட்டி, ''அண்மைக் காலமாக மாணவர்களுடன் சமூக வலைதளங்களில் தொடர்பில் உள்ளேன். நான்தான் என்னுடைய ட்விட்டர் கணக்கை கவனித்துக் கொள்கிறேன். மக்கள் கேட்கும் உதவிகளையும் முடிந்தளவு நிறைவேற்றிக் கொடுத்து வருகிறேன். 


ஆட்சியருக்கும் மக்களுக்குமான இடைவெளி ஒருகாலத்தில் அதிகமாக இருந்தது. இப்போது எல்லாமே மாறிவிட்டது. சமூக வலைதளங்கள் அதை மாற்றி அமைத்திருக்கின்றன. மக்களுக்குக் கேள்வி கேட்பதற்கான அதிகாரம் உள்ளது. அதற்கு பதில் சொல்ல வேண்டியது அதிகாரிகளின் கடமை. அந்த வகையில் மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, நகைச்சுவையுடன் பதில் அளித்தேன். அப்படிச் செய்தால் அந்த செய்தி அதிகம் பேரைச் சென்றடையலாம் என்று நினைத்து, அப்படிச் செய்தேன்'' என்றார். 


ஆன்லைனில் நடத்தவும் திட்டம்


'காஃபி வித் கலெக்டர்' நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இயர்புக், அகராதி உள்ளிட்ட புத்தகங்களை வழங்கவும் ஆட்சியர் முடிவெடுத்துள்ளார். அதிகரிக்கும் கொரோனா பரவலால் நிகழ்வு தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தேவைப்பட்டால் ஆன்லைனிலேயே சந்திப்பை நடத்தவும் திட்டமிட்டு வருகிறார். 


பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இவரின் முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இவை எல்லாவற்றையும்விடப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பாராட்டுகள் அதிக உற்சாகம் அளிப்பதாகப் பெருமிதம் தெரிவிக்கிறார் விருதுநகர் ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி.