இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே மீண்டும் கொரோனா தொற்றின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சாப், உ.பி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுமா..? அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. 


இந்தநிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5  மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுவதாக அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு  வந்துள்ளன. எனவே, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. அதேசமயம், தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லி விக்யான் பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா  “கொரோனா நேரத்தில் தேர்தல் நடத்துவது பெரிதும் சவாலானது. கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடத்தப்படும். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 


மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு தேர்தலை நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன.” எனத் தெரிவித்தார். மேலும், கோவா – 40,பஞ்சாப்-117, உத்தரகாண்ட்-70, மணிப்பூர்-60, உ.பி – 403 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


தற்போது, இந்திய தேர்தல் ஆணையம் உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தலுக்கான தேதியை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும், முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார். 


அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் பிப்.20ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் பிப்.24ஆம் தேதியும், 5 ஆம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும்,ஆறாம் கட்ட தேர்தல் மார்ச் 3ம தேதியும், 7ம் கட்டதேர்தல்  மார்ச் 7ம் தேதியும் நடைபெறுகிறது.


உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தலை பொறுத்தவரை பாஜக, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண