தமிழ்நாட்டு பள்ளிகளில் ஓமைக்ரான் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உலகின் 30 நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று என்பதை மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும், பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும் என்றும், இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என்றும், கொரோனா தடுப்பு தொடர்பான அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டுக்குள் இன்னும் பரவவில்லை என்றும், சென்னை, திருச்சியில் இந்த தொற்று உறுதியானதாக சமூகவலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறு எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அளித்த பேட்டியில், “ஓமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தேவைப்படாது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு ஓமைக்ரான் உள்ளதா என கண்டறிய மாதிரி பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்முடிவு வந்த பிறகே என்ன வகை கொரோனா என தெரியும். ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டுக்குள் இன்னும் பரவவில்லை. தமிழ்நாட்டில் ஓமைக்ரான் தொற்று பரவியதாக சமூக வலைத்தளங்களில் வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை. மூன்றாவது தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு தொடங்கினால் தமிழ்நாட்டிலும் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்