மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தொழிலதிபர் கவுதம் அதானியை கொல்கத்தாவில் உள்ள 'நபன்னா' என்ற மாநிலச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஒன்றரை மணிநேரம் நடைபெற்றுள்ளது. 


மேற்கு வங்கத்தில் தொழில் முதலீடு செய்வது குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள வங்காள உலக வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதையும் அதானி உறுதி செய்துள்ளார். 


இதுகுறித்து அதானி தனது ட்விட்டர் பக்கத்தில், “மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சந்திப்பில் பல்வேறு முதலீட்டு சூழல்கள் மற்றும் மேற்கு வங்காளத்தின் மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் நடக்கும் வங்காள வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


 






முன்னதாக, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மும்பைக்கு சென்ற மம்தா பானர்ஜி, அங்கு சரத் பவார் மற்றும் ஆதித்யா தாக்கரே போன்ற அரசியல்வாதிகளையும் ஜாவேத் அக்தர் மற்றும் ஸ்வரா பாஸ்கர் போன்ற முக்கிய சமூக உறுப்பினர்களையும் சந்தித்து பேசினார். அதன் பிறகே அதானியுடனான இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 


2024 தேர்தலில் எப்படியாவது மோடியின் பாஜகவின் அரசை கவிழ்த்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என மம்தா கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார். இதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பல்வேறு அரசியல் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றிணைத்து வருகிறார். ஆனால் முகாந்திரம் தற்போதைக்கு இல்லை என்பதுபோன்ற தோற்றம் தற்போது உருவாகியுள்ளது. அதற்கு காரணம் சமீபத்தில் சரத்பவாரை சந்தித்துவிட்டு மம்தா அளித்த பேட்டியே.... 




அந்த பேட்டியில், “மத்தியில் தற்போது நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க, ஒருவரும் இல்லை. இதனால், மாற்று அணி உருவாக்கப்பட வேண்டும். இது பற்றி மூத்த தலைவர் சரத்பவாருடன் தீவிர ஆலோசனை நடத்தினேன்.
சரத்பவார் கூறியதை நான் ஏற்று கொள்கிறேன். தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்றும் இல்லை; அது மறைந்துவிட்டது. மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், மத்தியில் ஆளும் பா.ஜ.வை எளிதில் வீழ்த்திவிடலாம்” எனத் தெரிவித்தார். 




பாஜக அரசை வீழ்த்த பல்வேறு வியூகங்களை மம்தா வகித்து வரும் இந்த் நேரத்தில்தான் தொழிலதிபர் அதானியையும் மம்தா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அரசியல் நகர்வுகளை பற்றியும் விவாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.