ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் (கட் ஆப் மதிப்பெண்) குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021 ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகளில் 87.89% க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அட்வான்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 


முன்னதாக, பி.இ/ பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கான 2021 ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை நான்கு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஆப்ரஹாம் உட்பட 44 பேர் 100% மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாக தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குநர் டாக்டர் சாதனா பராஸர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


4 கட்ட தேர்வுகளிலும் பங்கேற்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் மாணவர்கள் அவற்றில் பெற்றிருந்த அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வாறு கணக்கிடப்பட்ட சிறந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் மாணவர்களின் தரவரிசை தயாரிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு விண்ணப்பம்:  ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை இன்று முதல் மாணவர்கள்  பூர்த்தி செய்ய தொடங்கலாம். பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி, செப்டம்பர் 20 ஆகும். ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி செப்டம்பர் 21 ஆகும்.  




ஜேஇஇ மெயின் தேர்வு Vs ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு:  தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் NIT), மேற்குவங்காளத்தின் ஷிப்பூரிலுள்ள  இந்திய பொறியியல் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் ( Indian Institute of Engineering Science and Technology (IIEST), Shibpur (West Bengal), மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களின் (Centrally Funded Technical Institutions) (இந்திய தொழில்நுட்ப கழகங்களைத் தவிர்த்து) இளங்கலைப்படிப்புக்கான சேர்க்கையானது, தேசிய தேர்வு முகமை நடத்தும் இணை நுழைவுத்தேர்வான ஜேஇஇ (மெயின்)-இன்  தரவரிசை/ தகுதியின் அடிப்படையில் நடைபெறும்.


ஜேஇஇ மெயின் தேர்வின் தரவரிசையின் அடிப்படையில் இந்திய தொழில்நுட்பக் கழகங்களுக்கான (IIT's) மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். 


75% மதிப்பெண் பெற தேவையில்லை: ஜேஇஇ (மெயின்) தேர்வின் அடிப்படையில், 2021- 22 கல்வி  ஆண்டில், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனங்கள், திட்டம் மற்றும் கட்டிடக்கலை நிறுவனங்கள், மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களில் சேரும் தகுதியைப் பெறுவதற்கு, 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதியை மத்திய கல்வி அமைச்சகம் தளர்த்தியது