நாடு முழுவதும் நீட் மட்டுமல்ல அனைத்து தேர்வு முறைகளிலும் மிகவும் தீவிரமான பிரச்சினை நிலவுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார். 


மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, கொல்லம் எம்.பி. பிரேமச்சந்திரன் உள்ளிட்ட எதிர்க் கட்சி எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர். அவர்களுக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துப் பேசினார். அப்போது, 7 ஆண்டுகளாக நீட் வினாத்தாள் கசிவு நடந்தது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அரசியலுக்காகவே எதிர்க் கட்சிகள் நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


அனைத்து தேர்வு முறைகளிலும் மிகவும் தீவிரமான பிரச்சினை


தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் நீட் மட்டுமல்ல அனைத்து தேர்வு முறைகளிலும் மிகவும் தீவிரமான பிரச்சினை நிலவுகிறது. மத்தியக் கல்வி அமைச்சர் அமைச்சர் தர்மேந்திர பிரதான், தன்னைத் தவிர பிற அனைவரையும் குற்றம் சாட்டிவிட்டார்.  அவருக்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என்பதன் அடிப்படை புரியவில்லை. இது முறைப்படுத்தப்பட்ட பிரச்சினை என்றால், சரிசெய்ய என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?


நீட் தேர்வு முறை ஒரு மோசடி என்றும் நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் நீட் தேர்வு முறைகேடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று கவலையாக இருக்கிறார்கள்.






பணம் இருந்தால் தேர்வு முறையையே விலைக்கு வாங்கலாம்


பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் தேர்வில் தேர்ச்சி பெறலாம், தேர்வு முறையையே விலைக்கு வாங்கலாம் என்று நம்புகிறார்கள். இதையேதான் எதிர்க் கட்சிகளும் நம்புகிறோம். நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் சரி செய்ய என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?


இவ்வாறு ராகுல் காந்தி மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்.


எனினும் நாட்டின் தேர்வு முறையை இவ்வாறு விமர்சிப்பது கண்டனத்துக்கு உரியது என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ’’2010ஆம் ஆண்டு யார் ஆட்சியில் இருந்தது? நீட் தேர்வைக் கொண்டுவர முடிவு செய்தது யார்? நீட் தேர்வு வேண்டும் என்று உச்ச நீதிமன்றே தெரிவித்துள்ளது. பொதுத் தேர்வு மசோதாவை ஏன் காங்கிரஸ் கொண்டு வரவில்லை? தற்போது நடைபெற்ற சிறு சிறு தவறுகள் கூட இனி வருங்காலத்தில் நடைபெறாது’’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.