மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் வசதிக்காக, தமிழக அரசின் சார்பில் அண்ணா மேலாண்மை நிறுவனம், ’நோக்கம்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் TNPSC,UPSC, SSC, IBPS உள்ளிட்ட மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.  


இதுகுறித்து அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரி இன்று கூறி உள்ளதாவது:


'நோக்கம்‌' செயலி அறிமுகம்‌


தமிழ்நாடு அரசின்‌ முதன்மைப்‌ பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரி அரசுத்‌ துறைகளிலும்‌, பொதுத்‌ துறை நிறுவனங்களிலும்‌ பணிபுரிபவர்களுக்குப்‌ பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின்‌ தன்மையை விரிவுபடுத்தவும்‌. தமிழகத்தின்‌ மூலை முடுக்குகளுக்கெல்லாம்‌ அது சென்றடைய வேண்டும்‌ என்ற எண்ணத்திலும்‌ AIM TN என்று அழைக்கப்படும்‌ யூடியூப் தளம் ஒன்றை ஆரம்பித்து அதில்‌ பயிற்சிக்‌ காணொலிகளைப்‌ பதிவேற்றம்‌ செய்து வருகிறது.


இந்த யூடியூப் தளத்தின்‌ நீட்சியாக  அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரி போட்டித்‌ தேர்வுகளுக்கென்றே 'செயலி' ஒன்றை உருவாக்கியுள்ளது.




'நோக்கம்‌' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியின்‌ மூலம்‌ தமிழ்நாடு அரசுப் பணியாளர்‌ தேர்வாணையம்‌ (TNPSC), தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ (TNUSRB), மத்திய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (UPSC), வங்கிப்‌ பணியாளர்‌ தேர்வு நிறுவனம்‌ (IBPS), மத்திய ஆட்சேர்ப்பு வாரியம் (SSC) போன்ற அனைத்து நிறுவனங்கள்‌ நடத்தும்‌ தேர்வுகளுக்கும்‌ பயிற்சி அளிக்கத்‌ திட்டமிடப்பட்டுள்ளது. 


அன்றாடம்‌ பதிவேற்றப்படும்‌ பயிற்சிக்‌ காணொலிகளைக்‌ காண்பதோடு அதற்கான பாடக்‌ குறிப்புகளையும்‌ இந்த செயலி மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. இதன்‌ சிறப்பம்சமே மாதிரித்‌ தேர்வுகள்தாம்‌.


ஒவ்வொரு பாடத்திலும்‌ பலவிதமான தேர்வுகள்‌ நடத்தப்பட்டு விடைத் தாள்கள்‌ திருத்திக்கொடுக்கப்படும்‌. இது மாணவர்கள்‌ தங்கள்‌ தயாரிப்பின்‌ நிலையை அவ்வப்போது சுய மதிப்பீடு செய்து கொள்ள உதவும்‌.
 
'நோக்கம்‌' செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


இவ்வாறு அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரி தெரிவித்துள்ளது.


நோக்கம் செயலியைப் பதிவிறக்கம் செய்ய:https://play.google.com/store/apps/details?id=com.aasc.mission60 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.