கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு இனி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடைபிடிக்கும் நடைமுறைப்படி இந்த சீர்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. 


வெயிட்டேஜ் மதிப்பெண்கள்:


இதுகுறித்த அரசாணையை கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.  ஆசிரியர் தேர்வு வாரியத்தை மறுசீரமைக்கும் வகையில் மொத்தம் 39 பரிந்துரைகள் அரசிடம் கொண்டுசெல்லப்பட்டு, இறுதிசெய்யப்பட்டன. அவை அரசாணையாகப் பிறப்பிக்கப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. 


இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக, போட்டித் தேர்வுக்கு இனி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது தேர்வர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


வயது வரம்பு தளர்வு


ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 40 வயதைத் தாண்டிய பொதுப்பிரிவினரும், 45 வயது தாண்டிய இடஒதுக்கீட்டுப் பிரிவினரும் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்சி- அருந்ததியர், எஸ்டி) முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. வயது வரம்பு கட்டுப்பாடு கடந்த அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது. அப்போது, ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வகையில் ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த செப்.9-ம் தேதி வெளியிட்ட, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்புக்கு இது பொருந்தும்.


2022-ம் ஆண்டு வரை


இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வரம்பு 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. அதுவரை வெளியிடப்படும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


அதேபோல நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு 1.1.2023 முதல் பொதுப்பிரிவினருக்கு 42 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதையும் வாசிக்கலாம்: CM Stalin: அரசுப்பள்ளி மாணவர்களின் மதிய உணவில் சிக்கன்..? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை