கோழிக்கறி:
அரசுப் பள்ளிகளின் மதிய உணவில் சிக்கன் எனப்படும் சமைக்கப்பட்ட கோழிக் கறியைச் சேர்க்கலாமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் யோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்கு சிக்கன் வழங்கப்பட உள்ளதை அடுத்து, தமிழ்நாட்டிலும் வழங்குவதற்கான வாய்ப்புகள் பற்றி முதல்வர் ஆலோசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிய உணவு திட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு சிக்கன் மற்றும் பருவ காலத்திற்கு ஏற்ப பழங்களைத் தர மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது. எனினும் அசைவ உணவு மற்றும் பழங்களை ஏப்ரல் மாதம் வரையில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மதிய உணவுத்திட்டம்:
வழக்கமான மதிய உணவுத் திட்டத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இனி ஏப்ரல் மாதம் வரை அத்துடன் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அந்தந்த பருவத்தில் விளையும் பழங்களையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1.16 கோடி குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்றும் அரசு இதற்காக ரூ.371 கோடி ஒதுக்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய உணவுத் திட்டத்தால் அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் செலவிடும் பணத்தில் கூடுதலாக ரூ.20 செலவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 16 வாரங்களுக்கு செயல்படுத்தப்படும் நிலையில் அரசுக்கு ரூ.320 கோடி கூடுதலாக செலவாகும். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, மேற்குவங்க அரசுடன் மத்திய அரசு செலவை 60:40 என்ற வீதத்தில் பங்கிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு 60 சதவீதம் செலவிடுகிறது.
முன்னோடி தமிழ்நாடு
கல்வி கற்பதற்காக மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைப்பதற்காக 1920-ல் நீதிக்கட்சியால் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து படிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, உணவுக்காகவது குழந்தைகள் பள்ளிக்கு வரட்டும் என்று கடும் நிதி நெருக்கடிக்கு இடையிலும் பள்ளிகளில் உணவு கொடுத்தார் படிக்காத மேதை காமராசர். மத்திய அரசின் உதவியுடன், கொடுக்கும் உணவை சத்தாக வழங்கினார் எம்ஜிஆர். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் 1982ஆம் ஆண்டு கிராமப்புற பகுதிகளில் 2 முதல் 9 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டும் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1984 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
அவருக்குப் பின்னர் வந்த கலைஞர் கருணாநிதி சத்துணவுடன் குழந்தைகளுக்கு அவித்த முட்டையையும் முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழத்தையும் கொடுத்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை ஆரம்பித்து, உணவும் தானியங்களும் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்தார். சத்துணவுடன் காய்கறிகளையும் சேர்த்து வழங்கினார் ஜெயலலிதா. எனினும் இவை அனைத்துமே மதிய உணவுத் திட்டமாக மட்டுமே தொடர்ந்தன.
தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் காலை உணவு
இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட சில இடங்களில் உள்ள பள்ளிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு, தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்ந்து 5 முக்கியத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
செப்.15-ல் தொடக்கம்
பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் (Free Breakfast Scheme), அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. 1 - 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை, முதலமைச்சர் மதுரையில் தொடங்கி வைத்தார்.
அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாகக் காலைச் சிற்றுண்டி திட்டமானது 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனனர்.
தற்போது ஆண்டுக்கு 220 வேலை நாட்களுக்கு 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவு
இந்த நிலையில் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டித் திட்டம் விரிவுசெய்யப்பட உள்ளதாக, முதல்வர் சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் வாரம் ஒருமுறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட கோழிக் கறியை வழங்குவதில் உள்ள வாய்ப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இடையே ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்கு சிக்கன் வழங்கப்பட உள்ளதை அடுத்து, தமிழ்நாட்டிலும் வழங்குவதற்கான வாய்ப்புகள் பற்றி முதல்வர் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.