கல்வித் தரத்தை மேம்படுத்தவே ஆல் பாஸ்(All Pass) முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில்
தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி நடத்தப்படும் மத்திய அரசுப் பள்ளிகளுக்கு, இந்தப் புதிய
நடைமுறை பொருந்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு எதிர்ப்பு
இதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து, பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று தெரிவித்து இருந்தது. தமிழ்நாட்டில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் தெரிவித்து இருந்தார்.
ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?
எனினும் கல்வித் தரத்தை மேம்படுத்தவே ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
’’ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை அடிப்படையாகக் கொண்டே ஒரு கல்வித் திட்டம் சரியாக இருக்கிறதா என்று நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழகம் தேசிய அளவில் 2018-ல் AISER அறிக்கைப்படி, 3ஆம் வகுப்பில் 22 சதவீதக் குழந்தைகளுக்கு மட்டுமே அடிப்படைக் கழித்தல் தெரிந்து இருந்தது. கேரளாவில் அதிகபட்சமாக 45% குழந்தைகளுக்கு தெரிந்திருந்தது. மொத்தத்தில் தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கணிதத் திறன் குறைவாக இருந்தது.
அதிர்ச்சிகரப் புள்ளிவிவரம்
இந்திய அளவில் 56 சதவீத இந்தியக் குழந்தைகளுக்கு 3 இலக்க எண்ணை, ஓரிலக்க எண்ணால் வகுக்க முடியவில்லை. 3ஆம் வகுப்பில் 80 சதவீதக் குழந்தைகளுக்கு அடிப்படை கழித்தல் தெரியவில்லை.
ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தேசிய சராசரியைவிட தமிழகத்தில் அதிகமாக உள்ளனர். 2024 என்சிஇஆர்டி ஆய்வுப்படி, 3ஆம் வகுப்பில் பாதிப்பேருக்கு தமிழை சரியாக வாசிக்கத் தெரியவில்லை. 5-ல் ஒருவருக்கு தாய்மொழியில் புலமை இல்லை. அந்த அளவுக்குத்தான் கல்வித்தரம் இருக்கிறது. அதனால் அதை மேம்படுத்த வேண்டும்.
ஆல் பாஸ் ரத்து ஏன்?
1980களில் எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதற்காக ஆல் பாஸ் கொண்டுவரப்பட்டது. ஆனால் 2024-ல் எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு வந்து, அடிப்படைக் கல்வியை படிக்க வேண்டும். அதனால்தான் மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது’’.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.