அதிமுக தலைமையில் கூட்டணி என ஏற்றுக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க யார் உறுதுணையாக இருந்தாலும் அவர்களோடு கூட்டணி வைப்போம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர்., நினைவு தினம்
அ.தி.மு.க., நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஏராளமான அ.தி.மு.க., தொண்டர்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், 2026 இல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., ஆட்சியை கொண்டு வர கடுமையான பாடுபட வேண்டும் என தொண்டர்களுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில், “தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. காவல்துறை செயலிழந்து விட்டது என்பதற்காக பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளது. தி.மு.க., அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி, சாதிக் பாஷா ஆகியோரின் வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல தமிழக மக்களுக்காக பொற்கால ஆட்சி நடைபெறவில்லை. முதலமைச்சரின் குடும்பத்திற்காக பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.
டி.டி.வி.தினகரன் சொல்வது அவருடைய கருத்தை
எம்.ஜி.ஆருக்கும் - பிரதமர் மோடிக்கு பல ஒற்றுமைகள் இருக்கின்றது என பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு, எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவரை போல யாரும் பிறக்கவும் முடியாது. தி.மு.கவில் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் ஜொலிக்கிறார்கள். கலைஞரை கூட மறந்துவிட்டார்கள். அதனால் தான் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அவரது பெயரை வைக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார். அ.தி.மு.க., தனித்து நின்று வெற்றி பெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மாற்றுக் கட்சி கருத்துக்கள் எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது.
பாப்கார்ன் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால் அதற்கு ஜிஎஸ்டி கூடாது
2026 அதிமுக கூட்டணி எப்படி இருக்கும் என்கிற கேள்விக்கு, அதிமுக தலைமையில் கூட்டணி என ஏற்றுக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க யார் உறுதுணையாக இருந்தாலும் அவர்களோடு கூட்டணி வைப்போம். இந்த நிபந்தனைகளை சசிகலா, டி.டி.வி தினகரன் ஏற்றுக் கொண்டால் அவர்களை அதிமுகவில் இணைப்பீர்களா என்ற கேள்விக்கு, சசிகலா, டி.டி.வி தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார், பாப்கார்ன் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால் அதற்கு ஜிஎஸ்டி உயர்த்துவது கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாது" என கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சபரிமலை மண்டல பூஜை, ஆரண்முளாவிலிருந்து புறப்பட்டது ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம்..!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு