வளாக நேர்காணலில் பிஹார் என்ஐடியைச் சேர்ந்த அதிதி திவாரி என்ற மாணவி, ஆண்டுக்கு ரூ.1.6 கோடி ஊதியத்தில் பணிக்குத் தேர்வாகி உள்ளார்.
கொரோனா வைரஸும் அதைத் தொடர்ந்த பொது ஊரடங்கும் சமுதாயத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்கள் வேலையிழப்பாலும் ஊதிய வெட்டாலும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பள்ளி, கல்லூரிகள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் கற்பித்தல் நிகழ்த்தப்பட்டது. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா பேட்ச் மாணவர்கள் என்று சம்பந்தப்பட்ட மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.
இந்த சூழலில், 2022ஆம் ஆண்டு வளாக நேர்காணலில் பிஹார் என்ஐடியைச் சேர்ந்த அதிதி திவாரி என்ற மாணவி, ஆண்டுக்கு ரூ.1.6 கோடி ஊதியத்தில் பணிக்குத் தேர்வாகி உள்ளார்.
அதிதி திவாரி பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இறுதி ஆண்டு மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் படிப்பைப் படித்து வருகிறார். இவரின் தந்தை டாட்டா ஸ்டீல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். தாய் அரசுப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
பாட்னா என்ஐடி வரலாற்றிலேயே, அங்கு படித்த ஒருவர் வளாக நேர்காணல் மூலம் பெறும் மிக உயர்ந்த ஊதியம் இதுவாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற வளாக நேர்காணலில் அதிகபட்ச ஊதியமாக ரூ.50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை மட்டுமே மாணவர்கள் பெற்றனர்.
ஆனால், 2022ஆம் ஆண்டு அதிதி ரூ.1.6 கோடி ஊதியத்தைப் பெற உள்ளார். இரண்டு ஆண்டுகால கொரோனா காலத்துக்குப் பிறகு பிஹார் என்ஐடியில் இந்த ஆண்டு வளாக நேர்காணலில் பங்கேற்ற எல்லோருக்குமே வேலை கிடைத்திருக்கிறது. வேலைவாய்ப்பு சதவீதம் 110 ஆக உள்ளது. இதன்மூலம் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாக என்ஐடி கல்லூரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
எனினும் அதிதி திவாரி எந்த நிறுவனத்தில் தேர்வாகி உள்ளார் என்ற விவரத்தை என்ஐடி பாட்னா கல்லூரி நிர்வாகம் அறிவிக்கவில்லை. அவர் ஃபேஸ்புக் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்புக்குத் தேர்வாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்