நீண்டஎதிர்பார்ப்புக்குப் பிறகு, இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை  இன்று வெளியிட்டுள்ளது.


கடந்த ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவம் மற்றும் எம்.பி.பி.எஸ். எனப்படும் இளங்கலை மருத்துவ படிப்புகள் உள்ளிட்டவற்றுக்காக நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 மாணவர்கள் விண்ணப்பித்தனர். நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதினர்.


இந்த தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. நீட் தேர்வு இந்தியாவில் உள்ள நகரங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்காக முதல்முறையாக நடத்தப்பட்டது. குறிப்பாக கொழும்பு, காத்மாண்டு, பாங்காக், கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், அபுதாபி, மஸ்கட், ஷார்ஜா, குவைத், தோஹா, மனாமா, ரியாத், லாகோஸ் நகரங்களிலும் நடத்தப்பட்டது.




இதற்கிடையே நீட் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று வெளியாகின. இறுதி விடைக்குறிப்பு அண்மையில் வெளியானது. செப்டம்பர் 7ஆம் தேதி (இன்று) நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது. இதனால் தேர்வர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.


இந்நிலையில் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. சரிபார்ப்பது எப்படி?


neet.nta.nic.in என்ற இணையப் பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும். 
* முகப்புப் பக்கத்தில் NEET UG 2022 result என்ற இணைப்பை க்ளிக் செய்க.
* விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிடவும். 
* NEET UG 2022 result எனப்படும் தேர்வு முடிவுகள் வெளியாகும். 
* மதிப்பெண் பட்டியலைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும். 


கடந்த ஆண்டு கட்-ஆஃப் விவரம்



  1. பொதுப்பிரிவு- 720-138 

  2. எஸ்சி பிரிவினர்- 137-108

  3. எஸ்டி பிரிவினர்- 137-108

  4. ஓபிசி பிரிவினர்- 146-113

  5. எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி (மாற்றுத்திறனாளிகள்)- 121-108.


இந்திய மருத்துவ கவுன்சிலின் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் உள்ள 270 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 41 ஆயிரம் எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் உள்ளன.


மதிப்பெண் கணக்கீடு


நீட் தேர்வு எழுதியவர்களின் ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறாட விடை ஒவ்வொன்றுக்கும் 1 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.


இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.