80ஸ் காலக்கட்டம் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காலக்கட்டம் என்றே சொல்ல வேண்டும். எத்தனை எத்தனை பிரமாண்டமான வெற்றிப்படங்கள் வெளிவந்தன. இளையராஜா இசை எங்கும் எதிலும் ஒலித்தது. இசையோடு சேர்த்து அழுத்தமான திரைக்கதை, இயக்கம், இசை என அனைத்தின் கலவையாக பல அற்புதமான படைப்புகள் வெளிவந்தன. அதில் ஒன்று தான் 1984ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படம்.
விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, ராதாரவி, டி.எஸ். ராகவேந்திரா, வடிவுக்கரசி, கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசை, கவுண்டமணியின் காமெடியையும் தாண்டி மிகவும் அழுத்தமான திரைக்கதை மூலம் இன்றும் மனதில் நிலைக்க வைத்துள்ளார். ரத்தம் சிவந்த கண்களோடு பார்த்து பழக்கப்பட்ட விஜயகாந்த்தின் அமைதியான முகத்தைக் காட்டி இருந்தார். இப்படம் அவரின் திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது.
அதே போல படத்தின் நாயகி ரேவதி கணவனை இழந்த கைம்பெண்ணாக நடித்திருந்தார். தன்னுடைய நிலை அறிந்து குடி போதைக்கு அடிமையான தந்தை ஒரு பக்கம், துணிச்சலான பெண்மணியாக மறுபக்கம் என மிக சிறப்பாக நடித்திருந்தார். ஒரு கைம்பெண்ணுக்கு இருக்கும் மனவலிமையையும் துயரத்தையும் மிக அழகாக ரேவதி மூலம் காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன். 'அழகு மலராட' என்ற பாடல் இன்றைக்கும் 80ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத ஒரு பாடல். விஜயகாந்துக்கு மட்டுமின்றி ரேவதிக்கும் 'வைதேகி காத்திருந்தாள்' ஒரு டர்னிங் பாய்ண்ட் படமாக அமைந்தது.
சமீபத்தில் தனியார் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை ரேவதி 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் அவர் கைம்பெண்ணாக நடித்தது குறித்து பகிர்ந்து இருந்தார்.
அது தொடர்பாக அவர் பேசுகையில் "ஒகேனக்கலில் அந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. வீட்டில் எங்க அம்மாவுடன் என்னோட பெரியம்மாவும் இருந்தாங்க. அவங்களும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு என் கூட வருவாங்க. அப்போ ஒரு நாள் நான் வெள்ளைப் புடவையில் நான் வருவதைப் பார்த்து அவர் அதிர்ச்சியாகி விட்டார். அவங்களோட கம்யூனிட்டியில் ஒரு குழந்தை வந்து பொட்டில்லாமல் வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு வந்து நின்றாள் எப்படி இருக்கும். அதனால் அதைப் பார்த்து ஷாக்காகி இந்த கேரக்டரா நீ பண்ணற? அப்படினு கேட்டாங்க. ஆமா அதனால என்னன்னு நான் கேட்டேன். ஐயோ இது வேண்டாம் எனக்கு கஷ்டமா இருக்கு அப்படினு சொல்லி சுத்தி எல்லாம் போட்டாங்க. இது வெறும் கேரக்டர் தான் பெரியம்மா என சொல்லி நான் அவங்களை சமாதானம் செய்தேன்" என்று பேசியுள்ளார் ரேவதி.