BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என, பகுஜன் சமாஜ்வாதி கட்சி தேசிய தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.


மாயாவதி கோரிக்கை:  


இதுதொடர்பாக மாயாவதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள நபரும், மாநில கட்சித் தலைவருமான ஸ்ரீ கே. ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை அவரது சென்னை இல்லத்திற்கு வெளியே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உடனடியாக கடுமையான/தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






மிகவும் சோகமான மற்றும் கவலையளிக்கும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, திரு ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் நாளை காலை சென்னை செல்ல திட்டமிட்டுள்ளேன். அமைதியையும் ஒழுங்கையும் பராமரிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


உடற்கூராய்வு நிறைவு:


6 பேர் கொண்ட கும்பலால் நேற்று சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்க் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது. நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதனிடையே, ராஜீவ் கந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலின் பிரேத பரிசோதனை நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடலை பெரம்பூரில் வைப்பதா அல்லது ரயில்வே மைதானத்தில் வைப்பதா என்பது குறித்து ஆலோசனை நடபெற்று வருகிறது. அதேநேரம், அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் பெரம்பூரில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.


சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு:


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து முடங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.