உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு திருத்தி அமைக்கப்பட்ட இளநிலை நீட் தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதைக் காண்பது எப்படி என்று காணலாம்.


நாடு முழுவதும் மே 5ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில், 13,31,321 மாணவிகளும் 9,96,393 மாணவர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் 17 மூன்றாம் பாலினத்தவரும் தேர்வை எழுதினர். இவர்களுக்கு யாரும் எதிர்பாராத விதமாக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளான, ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. 


முழு மதிப்பெண்கள் பெற்றது எப்படி?


இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இந்த சாதனை சர்ச்சைக்கும் வழிவகுத்தது. இத்தனை மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றது எப்படி என்று கேள்வி எழுந்தது. 


இதற்கிடையே பிஹார், பாட்னா உள்ளிட்ட நகரங்களில் நீட் முறைகேடு நடந்ததாகவும் ஆள் மாறாட்டம், வினாத்தாள் முன்கூட்டியே கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்ததாகவும் புகார் எழுந்தது. விசாரணையில் சில உறுதியும் செய்யப்பட்டன. 


44ஆகக் குறைந்தது


இந்த நிலையில், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதில், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்மூலம் 720-க்கு 720 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 67-ல் இருந்து 44ஆகக் குறைந்தது. 


இந்த நிலையில், நீட் தேர்வில் கேட்கப்பட்டிருந்த 19ஆவது கேள்விக்கு இரு பதில்கள் சரி என்று எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. என்டிஏ வெளியிட்ட விடைக் குறிப்பில் 4ஆவது ஆப்ஷனே சரியான விடை என்று கூறப்பட்டிருந்தது. எனினும் பழைய என்சிஇஆர்டி புத்தகத்தில் 2ஆவது ஆப்ஷனே சரியான விடை என்று குறிப்பிட்டுள்ளதால், இரண்டு ஆப்ஷன்களுக்கும் மதிப்பெண் அளிக்கவேண்டும் என்று மாணவர்கள் வாதிட்டு வந்தனர்.


முதலிடம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையும்


இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஐஐடி டெல்லி இயக்குநர் பேராசிரியர் பானர்ஜி 3 பேர் கொண்ட இயற்பியல் பேராசிரியர்கள் குழுவை நியமித்து, கேள்வியை ஆய்வு செய்தார். அதில், அவர்கள் 4ஆவது ஆப்ஷனே சரியான விடை என்று தெரிவித்தனர். அதாவது கதிரியக்க தனிமங்களின் அணுக்கள் நிலையானவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து என்டிஏ வெளியிட்ட விடைக் குறிப்பான 4ஆவது ஆப்ஷனே 19ஆவது கேள்விக்கு சரியான விடை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், 2ஆவது ஆப்ஷனைத் தேர்வு செய்த மாணவர்கள் 5 மதிப்பெண்களை இழக்க நேரிடும். இதனால் முதலிடம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தேர்வர்கள் https://exams.nta.ac.in/NEET/NEET2024SCRevised.html என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். அதில், விண்ணப்ப எண், பிறந்த தேதி, இ- மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட்டு, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 


கூடுதல் தகவல்களுக்கு: https://exams.nta.ac.in/NEET