நீட் தேர்வு எழுதுவதற்கான அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நாளை (ஏப்.12) கடைசித் தேதி என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. எனினும் ஆதார் தொடர்பான திருத்தங்களுக்கு ஏப்ரல் 15 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கும் சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா, நேச்சுரோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கும் நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (சுருக்கமாக நீட்) என்று அழைக்கப்படுகிறது. நீட் தேர்வு முதுகலைப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வாக நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆஃப்லைன் முறையில் தேர்வு
இந்தத் தேர்வு ஆண்டுதோறும் ஆஃப்லைன் முறையில் ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
பிப்ரவரி 9ஆம் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு, ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 10.50 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் ஏப்ரல் 10ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தினர்.
இந்த நிலையில், இன்றும் நாளையும் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆதார் தொடர்பான தகவல் மாற்றங்களை ஏப்ரல் 15ஆம் தேதி இரவு 11.50 மணி வரை மேற்கொள்ளலாம்.
எதையெல்லாம் மாற்ற முடியாது?
தேர்வர்கள் விண்ணப்பத்துக்கு முன்பதிவு செய்யும்போது அளிக்கப்பட்ட மொபைல் எண், இ – மெயில் முகவரியில் மாற்றம் செய்ய முடியாது. ஒரு முறை மட்டுமே விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்பதால், தேர்வர்கள் கவனத்துடன் திருத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.
கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய பிரிவுகளான பாலினம், மாற்றுத் திறனாளிகள் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை, கிரெடிட்/ டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யூபிஐ மூலம் செலுத்தலாம்.
தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://exams.nta.ac.in/NEET/images/neet-ug-2024-draft-ib-09022024.pdf என்ற தகவல் வழிகாட்டியைக் காணலாம்.
தொடர்புகொள்ள- தொலைபேசி எண்: +91-11-40759000
கூடுதல் விவரங்களுக்கு: https://neet.nta.nic.in/