மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் வெளியான நிலையில், தேர்வை எழுத விண்ணப்பித்த தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 571 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் பேனா- காகித முறையில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.


இன்னும் சில தினங்களில் ஹால் டிக்கெட்


அண்மையில் தேர்வு எங்கே நடைபெறும் என்பதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், ஹால் டிக்கெட் எனப்படும் அனுமதிச் சீட்டு இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது.


23.8 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்


2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் பிரிவில் 24 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக 23,81,833 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முன்வந்துள்ளனர். 


இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், க்ரீமி லேயர் அல்லாத ஓபிசி (OBC NCL) பிரிவினரைச் சார்ந்தவர்கள் ஆவர். 6 லட்சம் பேர் பொதுப் பிரிவு மாணவர்கள். அதேபோல, 3.5 லட்சம் மாணவர்கள் எஸ்சி பிரிவு மாணவர்கள் ஆவர். 1.8 லட்சம் மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவிலும் (Gen- EWS category) 1.5 லட்சம் மாணவர்கள் எஸ்டி பிரிவிலும் வருகின்றனர்.


மாணவர் சேர்க்கை


நாடு முழுவதும் உள்ள 645 மருத்துவக் கல்லூரிகள், 318 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் கல்லூரிகள், 47 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், நீட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. மாநிலக் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் 100 சதவீத ஒதுக்கீட்டுக்கும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மாநிலக் கல்லூரி இடங்கள், சொந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.


இந்த இடங்கள் அனைத்தும் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள், மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


நீட் தேர்வு நடைபெறும் இடங்களை அறிய: https://neet.ntaonline.in/frontend/web/advancecityintimationslip/index?-open-reg என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


கூடுதல் விவரங்களுக்கு: https://neet.ntaonline.in/