NEET UG 2023 : மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்படுகிறது.
நீட் தேர்வு 2023:
நாடு முழுவதும் உள்ள 645 மருத்துவக் கல்லூரிகள், 318 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் கல்லூரிகள், 47 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், நீட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ( பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
இன்று கடைசி நாள்
இதற்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நிறைவடைந்து, இன்று (ஏப்ரல் 6ஆம் தேதி) விண்ணப்பப் பதிவு முடிவடைய உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, neet.nta.nic.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைத் திருத்தம் செய்வது, ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்டவற்றுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.05 லட்சம் பேர் வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் 15,000க்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மேலும் பலரும் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
- விண்ணப்பப் படிவம் வெளியான உடன், தகுதியான தேர்வர்கள் neet.nta.nic.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- Candidate Activity என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அதில் NEET UG 2023 registration link என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அங்கு திறக்கப்படும் பக்கத்தில் தேர்வர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- தேர்வர்கள் விண்ணப்பிக்க: https://examinationservices.nic.in/neet2023/root/home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFcFR+natXIEjJ1rCf6DMgOrFA4SfAMU1biZWfro5QnPt என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
விண்ணப்ப கட்டணம்
நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்ப கட்டணமானது, பொதுப் பிரிவினர் - ரூ.1700, உயர் சாதி பொதுப் பிரிவினர், க்ரீமி லேயர் அல்லாத ஓபிசி பிரிவினர் - ரூ.1600, எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் - ரூ.1000, இந்தியாவுக்கு வெளியே தேர்வு எழுதுவோர்- ரூ.9,500 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் செயலாக்கக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவையும் செலுத்தப்பட வேண்டும்.
மேலும் படிக்க