இளநிலை நீட் தேர்வுக்கான மருத்துவக் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தேசிய மருத்துவ ஆணைய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. 


நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், ஆயுஷ் படிப்புகளுக்கு (சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி)  நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. நாடு முழுவதும் உள்ள 693 மருத்துவ கல்லூரிகளில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 163 மருத்துவ இடங்கள் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அண்மையில் தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 6-ம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நிறைவடைந்து, ஏப்ரல் 6ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தேசியத் தேர்வுகள் முகமை மீண்டும் விண்ணப்ப அவகாசத்தை நீட்டித்தது. இதன்படி, நீட் தேர்வை எழுத மாணவர்கள் மீண்டும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பித்தனர். 


21 லட்சம் பேர் எழுதிய தேர்வு


இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்கைகளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் நீட் தேர்வை எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 13ஆம் தேதி வெளியாகின. இதில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுதினர். இதில் 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றனர்.


ஜூலை 2ஆவது வாரத்தில் கலந்தாய்வு


இந்த நிலையில், இளநிலை நீட் தேர்வுக்கான மருத்துவக் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தேசிய மருத்துவ ஆணைய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, ஜூலை 2ஆவது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2022ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு அக்டோபர் மாதத்தில் தொடங்கி, நடைபெற்றது. 


இதற்கிடையே அனைத்து மாநில மருத்துவக் கல்லூரி துணை வேந்தர்களுக்கும், மருத்துவக் கல்வி செயலர்களுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில், ’’இளநிலை நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் தேசியத் தேர்வுகள் முகமையிடம் இருந்து ஜூன் 20ஆம் தேதி அன்று பெறப்பட்டன. தற்போது முடிவுகளை வெளியிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அந்தந்த மாநிலங்கள் டெல்லி அலுவலகத்துக்கு நேரடியாக வந்து, கலந்தாய்வுக்கான முடிவுகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன. வேறு சந்தேகங்களுக்கு 011- 23061110 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்’’ என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.