Ponmagan Podhuvaippu Nidhi Scheme: வருமானத்தில் ஒரு பங்கு தொகையை சேமிக்க வேண்டும். மாதந்தோறும் செலவுகள் இருப்பதை போலவே, கொஞ்சமாவது சேமிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களாக இருந்தால்,அவர்களுக்கு ஏற்ற சிறு சேமிப்பு திட்டங்கள் தபால் துறையில் இருக்கிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS)), பொது வருங்கால வைப்பு நிதி (15-year Public Provident Fund Account (PPF)), சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (Sukanya Samriddhi Accounts), பொன்மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. பொன்மகன் திட்டம் ’செல்ல மகன்களுக்காக’ என்று அஞ்சல் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களை காணலாம்.


 ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ 


ஆண் குழந்தைகளுக்காக தபால் நிலையங்களில் இருக்கும் சேமிப்புத் திட்டம்தான்  ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ (ponmagan scheme)ஆகும். பெண் குழந்தைகளுக்கான  ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ போலவே ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய்வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தியா முழுவதும் உள்ள எந்த தபால் நிலையங்களிலும் இதனை தொடங்கலாம்.


யாரெல்லாம் தகுதியானவர்கள்?


இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு குழந்தைகளின் வயது 10க்கு மேல் இருந்தால், அவர்களின் பெயரிலோ அல்லது  10 வயதுக்கு கீழ் இருந்தால் ஜாயிண்ட் அக்கவுண்ட் (Joint Account) மூலம் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 9.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும்.  இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு உண்டு. இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு, கணக்கு தொடங்கப்படுபவரின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி, ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் குழந்தையின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. 


சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்:


பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் வட்டி விகிதம் ஜனவரி-மார்ச் 2023-ஆம் ஆண்டில் தற்போதைய 8 சதவிகிதம் வட்டி விகிதம்  கவர்ச்சிகரமானது என்றே குறிப்பிடலாம். இத்திட்டம் ஒரு பெண் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோருக்கு உதவுகிறது.


சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கை 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் தொடங்கலாம். சிறுமிக்கு 18 வயது ஆனதும், அவர் அதற்கு உரிமையாளராவார். இந்தக் கணக்கை ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் திறக்கலாம். 


SSY கணக்கை எந்த வங்கி அல்லது தபால் அலுவலகத்திலும் தொடங்கலாம். மேலும் அதனைப் பிற வங்கி கிளைகள் அல்லது தபால் நிலையங்களுக்கு எளிதாக மாற்றலாம். இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மற்றும் முதிர்வு காலம் 21 ஆண்டுகள்.




 



சுகன்யா சம்ரிதி கணக்கு: வைப்பு விதிகள்


சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ் தொடங்கப்பட்ட கணக்கில் குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத் தொகையான ரூ.250-ல் தொடங்கலாம். டெபாசிட் செய்பவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம், ரூ.50-இன் மடங்குகளில். ஒரு மொத்த தொகை அல்லது ஒரு மாத அடிப்படையில் செலுத்தலாம். இருப்பினும், குறைந்தபட்ச தொகையை பராமரிக்கவில்லை என்றால், 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், மேலும் கணக்கு தவறியதாக கருதப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ரூ. 250 + ரூ. 50 செலுத்துவதன் மூலம், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் முடிவதற்குள், அவ்வாறு தவறிய கணக்கை புதுப்பிக்க முடியும்.


சுகன்யா சம்ரிதி யோஜனா சேமிப்பு: வரி பலன்கள் மற்றும் வட்டி


சுகன்யா சம்ரிதி யோஜனா சந்தாதாரர் அக்டோபர்-டிசம்பர் 2022 காலாண்டில் டெபாசிட்டுகளுக்கு 8 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுவார். சம்பாதித்த வட்டி ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் விலக்கு பெறத் தகுதியுடையது. அதே பிரிவின் கீழ் வைப்புத் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.