நீட் தேர்வில் தோல்வி அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, நீட் விலக்கை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை இட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


''நீட் தேர்வில் மூன்றாவது முறையாக தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக தென்காசி மாவட்டம் குலசேகர மங்கலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்!


மாணவி ராஜலட்சுமி ஏற்கனவே  இரு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இப்போது மூன்றாவது முறை. இந்த முறையும் அவரால் போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்றால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்!


நடப்பாண்டில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி ஆகிய மூவர்  ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டனர். ராஜலட்சுமி நான்காவது உயிரிழப்பு.  வரும் 7-ஆம் தேதி நீட் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இனியும் தற்கொலைகள் நிகழாமல் அரசு தடுக்க வேண்டும்!


ஏற்கனவே  பல்லாயிரம் முறை நான் கூறியவாறு நீட் விலக்குதான் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க ஒரே  தீர்வு ஆகும். இதை புரிந்து கொண்டு நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்; மத்திய அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும்''!


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


பின்னணி என்ன?


தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குலசேகர மங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அமல்ராஜ். அவரின் மனைவி வெண்ணியார். இந்தத் தம்பதிக்கு ராஜலெட்சுமி (21) என்ற மகள் இருந்தார்.


3 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 முடித்த மாணவி ராஜலட்சுமி, அப்போதில் இருந்து நீட் தேர்வை எழுதி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். இந்த ஆண்டு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தவர், நம்பிக்கையுடன் 3ஆவது முறையாகத் தேர்வை எழுதி இருந்தார். 


இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு  முடிவுகள் செப்டம்பர் 7 தேதி வெளியாக உள்ள நிலையில், தேர்வுக்கான ஆன்சர் கீ கடந்த 31ஆம் தேதி இரவு வெளியானது. அதில் தன்னுடைய விடைகளைச் சரிபார்த்த ராஜலட்சுமி, மதிப்பெண்கள் குறைவாக இருப்பதை அறிந்தார். 


இதனால் மன அழுத்தத்துடன் இருந்த மாணவி ராஜலட்சுமியைப் பெற்றோர் சமாதானப்படுத்தினர். எனினும் மாணவி ராஜலட்சுமி திடீரெனத் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 


முன்னதாக, நீட் தேர்வு அச்சத்தால் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி ஆகிய மூவர் நடப்பாண்டில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.