பொது மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, கர்நாடகாவின் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த லிங்காயத் சமூகத்தின் மடாதிபதியான சிவமூர்த்தி சரணரு நேற்று கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு மைனர் பெண்கள் அவர் மீது குற்றம் சாட்டி இருந்தனர். 6 நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.


64 வயதான சிவமூர்த்தி முருகா சரணரு, முக்கிய லிங்காயத் பிரிவான முருகா மடத்தின் தலைவராக உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


கர்நாடகாவின் சித்ரதுர்கா மற்றும் மைசூர் மாவட்டங்களில் பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டத்திற்குப் பிறகு இரவு 10.15 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


கைது நடவடிக்கைக்கு முன்பாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர். கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மடத்தின் முன் கதவை அடைத்து பின் கதவு வழியாக அவரை வெளியே அழைத்துச் சென்றனர்.


அவர் சித்ரதுர்காவில் உள்ள சல்லகெரேயில் உள்ள துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். முருகா மடத்தைச் சேர்ந்த மாணவிகள் இருவரும் மைசூரில் உள்ள அரசு சாரா நிறுவனத்தை அணுகியதை அடுத்து ஆகஸ்ட் 26ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக இரண்டு மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


ஜூன்-ஜூலையில் புகார் அளிக்க மாணவிகள் மேற்கொண்ட முந்தைய முயற்சி தோல்வி அடைந்தது. மாணவிகள் புகார் அளிக்க வந்திருப்பது தொடர்பாக பெங்களூரு காவல்துறை, மடத்தின் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர். மடத்தின் அலுவலர்கள் வந்து மாணவிகளை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.


லிங்காயத் சமூகத்தின் அரசியல் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, மாநில அரசியல் தலைவர்கள், கட்சி வேறுபாடுகளைக் கடந்து, இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில், ராகுல் காந்தியை லிங்காயத் சமூகத்தில் சிவமூர்த்தி சரணரு இந்த மடத்தில் வைத்து தான் சேர்த்து கொண்டார்.


கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் முன்னோடியும், முன்னாள் முதலமைச்சருமான பி.எஸ். எடியூரப்பா அவருக்குப் பகிரங்கமாகவே ஆதரவளித்தார். "தவறான வழக்கில் அவர் சிக்கியிருக்கிறார்" என அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.