நீட் தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு சர்ச்சை:
நீட் தேர்வு ( National Eligibility-cum-Entrance Test (NEET)) வினாத்தாள் தேர்வு நாளுக்கு முன்னதாக வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அனுராக் யாதவ், நிதிஷ் குமார், அமித் ஆனந்த், தனாப்பூர் நகராட்சித் தலைவர் ஜூனியர் பொறியாளர் சிகந்தர் யடாவெண்டு ஆகியோர் கைது செய்யப்பட்டு பீகார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமித் ஆனந்த் நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் வினாத்தாள் வெளியானது உண்மை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் சிலருக்கு நீட் வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில்களை மனப்பாடம் செய்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பீகார் போலீசார் தெரிவித்தனர்.
”கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர்
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் தெரிவிக்கையில், தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும், மாணவர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதியுடன் உள்ளது என்பதை உறுதி அளிக்க விரும்புகிறேன். இவ்விவகாரத்தில், வெளிப்படைத்தன்மையில் சமரசம் செய்ய மாட்டோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு சர்ச்சை விவகாரம் குறித்து, பீகார் அரசுடன் தொடர்பில் உள்ளோம். பாட்னாவில் இருந்து சில தகவல்களை பெற்று வருகிறோம். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி விரிவான அறிக்கை சமர்பிப்பார்கள். நம்பகமான தகவலைத் தொடர்ந்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” .
தேசிய தேர்வு முகமை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். மேலும், தேசிய தேர்வு முகமை மீது தவறு இருந்தாலும் , தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.