குரோம்பேட்டை அரசுப்பள்ளி மாணவர் சுந்தர்ராஜன் நீட் பயிற்சி மையம் எதற்குச் செல்லாமலேயே முதல் முயற்சியில் 503 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.


தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் மிகவும் பின்தங்கி உள்ள நிலையில், இந்த வெற்றி சாத்தியமானது எப்படி? பார்க்கலாம்.


மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் (செப்டம்பர் 7) வெளியாகின. இதில் ஒட்டுமொத்தமாக 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்ச்சி விகிதம் 56.3% ஆக உள்ளது. ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. எனினும் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் 2 ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. 


அதேபோல நீட் தேர்வில் தேசிய அளவில் 715 மதிப்பெண்கள் பெற்றதே முதலிடமாக உள்ளது. தமிழக அளவில் 705 மதிப்பெண்களைப் பெற்று 30ஆவது இடத்தை த்ரிதேவ் விநாயகா என்ற மாணவர் பெற்றுள்ளார். அடுத்ததாக 43 இடத்தை ஹரிணி என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் 702 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். 


தமிழ்நாட்டில் இந்த முறை 132,167 மாணவர்கள் நீட் தேர்வை எழுதி இருந்தனர். இதில் 17,517 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்ற நிலையில், இதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு முடிவுகளில் பல மாநிலங்கள் அதிகமான தேர்ச்சியை பெற்ற நிலையில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்தது.


தேர்வு எழுதிய 17,000 அரசுப்பள்ளி மாணவர்களின் 80% பேர் தோல்வியடைந்திருப்பதாகவும் அவர்களில் சிலர் நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 




இந்நிலையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி மாணவர் சுந்தர்ராஜன் நீட் பயிற்சி மையம் எதற்குச் செல்லாமலேயே முதல் முயற்சியில் 503 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அவரிடம் ABP நாடு சார்பில் பேசினேன். 


உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். முதல் முறை நீட் தேர்வு எழுதுகிறீர்களா?


சின்ன வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பது என்னுடைய கனவு, லட்சியம். குரோம்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் படித்து, இந்த ஆண்டுதான் பிளஸ் 2 தேர்வு எழுதினேன். 576 மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்தேன். முதல்முறையாக நீட் தேர்வையும் எழுதினேன்.


நீட் தேர்வுக்கு எப்படித் தயார் ஆனீர்கள்?


11ஆம் வகுப்பில் இருந்து நீட் தேர்வுக்குப் படித்து வருகிறேன். மாநிலப் பாடத்திட்டமே நல்ல தரத்துடன்தான் இருக்கிறது. அதில் இருந்தும் நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எந்தப் பாடத்தைப் படித்தாலும் அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளித்துப் பார்ப்பேன். எந்த தப்பு செய்திருக்கிறோம் என்பதைப் பார்த்து, திருத்திக் கொள்வேன். படிப்பதை நோட்ஸ் எடுத்துக்கொள்வேன். 


வரிக்கு வரி விடாமல் படிப்பேன். படித்ததையும் கணக்குகளையும் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வேன். விடுமுறை நாட்களில் உயிரியல் பாடத்துக்கு மட்டும் என்சிஇஆர்டி புத்தகத்தை வாங்கிப் படித்தேன். 


உங்கள் பள்ளியில் என்ன பயிற்சி அளிக்கப்பட்டது?


கொரோனா காலத்தில் 11ஆம் வகுப்பில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மொத்தமே 10 நாட்கள்தான் வகுப்புகள் இருந்திருக்கும். 12ஆம் வகுப்பில் ஒருநாள் விட்டு ஒரு நாள் வகுப்பு நடத்தப்பட்டது. வீட்டில் இருந்தே நான் படித்ததால், தேவைப்படும்போது பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டேன். 


யாருமே சொல்லிக் கொடுக்காமல், எப்படி நீங்களாகவே படித்தீர்கள்?


சந்தேகம் இருந்தால் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் கேட்டு, தீர்த்துக் கொள்வேன். என் அண்ணன் பி.எஸ்சி. இயற்பியல் படித்து வருவதால், இயற்பியல் பாடத்தில் சந்தேகம் என்றால், அவர் சொல்லிக் கொடுபார். பிளஸ் 2 படிக்கும்போது ட்யூஷன் சென்ற தட்சிணாமூர்த்தி சாரும் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார்.  




நீட் பயிற்சி மையத்தில் சேராதது ஏன்?


அரசு இந்த முறை நீட் பயிற்சியை வழங்கவில்லை. நீட் தேர்வில் வெல்ல தனியார் பயிற்சி மையத்துக்குச் செல்லச்சொல்லி பலர் அறிவுறுத்தினர். நானும் சில நாட்கள் சென்றேன். பயிற்சி மையத்தில் சொல்லித் தரவில்லை. படிக்க வைத்தனர். எனக்கு அது ஒத்துவரவில்லை. அதனால் உடனே நின்றுவிட்டேன். வீட்டில் இருந்தே படிக்க ஆரம்பித்தேன். 


உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...


அப்பா பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். இப்போது வெளியில் இருந்து வேலை எடுத்துச் செய்கிறார். அம்மா இல்லத்தரசி. அண்ணன் பிஎஸ்சி பிசிக்ஸ் படிக்கிறார். தங்கை ஹரிணி அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள். 


தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதே... என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?


கோவிட் முக்கியக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடன் படித்த மாணவர்கள் நிறையப் பேர் அப்போது படிக்கவில்லை. நானே பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால் பள்ளி இல்லாததால், அவர்கள் படிக்கவில்லை. ஆனால் வகுப்புகள் இல்லாததுதான் எனக்கு பிளஸ்ஸாக இருந்தது. வீட்டில் இருந்து படித்துக்கொண்டே இருந்தேன். பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதால் இனி வருங்காலத்தில் நீட் தேர்ச்சி அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். 



படித்துக்கொண்டே இருந்தது மன அழுத்தத்தை ஏற்படுத்தவில்லையா?


அவ்வப்போது அழுத்தம் ஏற்படும். அப்போதெல்லாம் எப்படியாவது மருத்துவ இடத்தைப் பெற்று விட வேண்டும். தலைசிறந்த மருத்துவக் கல்லூரியில் இடம்பிடிக்க வேண்டும். என்னுடைய கனவை நனவாக்க வேண்டும் என்று யோசிப்பேன். உடனே மீண்டும் படிக்க வேண்டும் என்று தோன்றிவிடும். படிக்க ஆரம்பித்துவிடுவேன். அதேபோல, இவ்வளவு படித்திருக்கிறோம் என்று யோசிக்க மாட்டேன். இன்னும் இவ்வளவு படிக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். 


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


அரசுப் பள்ளி மாணவர்களாலும் முடியும். அவர்களுக்கு தன்னம்பிக்கைதான் முக்கியம். அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். நிறையப் பேர் நீட் தேர்வைப் பார்த்து பயப்படுகிறார்கள். பயத்தால் அவர்கள் படித்தது மறந்து விடுகிறது. அந்த பயத்தைப் போக்க வேண்டும். நம்மால் கட்டாயம் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையோடு படித்தால், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற முடியும்’’. 


இவ்வாறு மாணவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.