2024ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வில் இந்தியா முழுவதும் எளிதான வினாத்தாள் அளிக்கப்பட்டு, தூத்துக்குடியில் மட்டும் கடினமான வினாத்தாள் அளிக்கப்பட்டதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ மாணவிகள் மனு அளித்தனர். 


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் அளித்துள்ள மனுவில், "2024 நீட் தேர்வில் இந்தியா முழுமைக்கும் இதுவரை இல்லாத வகையில் மிக மிக எளிய QRST வரிசை எண் கொண்ட வினாத்தாள் மூலம் நீட் தேர்வு 2024 மே மாதம் நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு மட்டும் மிக மிகக் கடினமான MNOP வரிசை எண் தெரிய வினாத்தாள் வழங்கப்பட்டது. இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக நாங்கள் முறையிட்டும் இதுவரை தேசியத் தேர்வுகள் முகமையால் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.


தூத்துக்குடி அழகர் பப்ளிக் ஸ்கூல் தேர்வு மையத்தில் நீட் தேர்வை எழுதினோம். எங்களின் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாலும், விடையளிக்க அதிக நேரம் செலவானதாலும் எங்களால் அதிக மதிப்பெண் பெற இயலாமல் போய்விட்டது. எங்களது எதிர்காலமே எங்கள் கண்முன் இருண்டு காணப்படுகிறது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எங்களோடு நீட் தேர்ச்சி பெறுவதற்கு பணம் செலவு செய்து முன் முயற்சிகளை எடுத்து உழைத்த எங்களது பெற்றோர்களும் கண்ணீர் வடித்து நிற்கின்றனர். 


எங்களது மருத்துவர் கனவு, கனவாகவே போய்விடுமோ? என்ற ஏக்கம் எங்களை வாட்டி வதைக்கிறது. எனவே, QRST மாடல் டைப் வினாத் தாள்களுக்கு தனி கலந்தாய்வு, தனிக் கட்ஆஃப் மார்க்கும், MNOP மாடல் வினாத்தாள்களுக்கு தனி கலந்தாய்வு தனி கட் ஆஃப் மதிப்பெண்களைக் கொடுக்க வேண்டும்’’ என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


என்ன நடந்தது?


நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாட்டில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வெழுதினர். இதில் 12,730 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்னப்பித்து இருந்தனர்.  


இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்கள், நீட் தேர்வு மையங்களாக செயல்பட்டன. குறிப்பாக அழகர் பள்ளி, கமலாவதி பள்ளி, சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆகியவை நீட் தேர்வு மையங்களாகச் செயல்பட்டன.


நீட் தேர்வு குளறுபடி


இந்த நிலையில், அழகர் பள்ளி மற்றும் கமலாவதி பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் மாறியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும் 200 கேள்விகளும் முற்றிலுமாக மாற்றி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2 தேர்வு மையங்களிலும் சுமார் 1500 மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வினாத்தாள் m, n, o, p என்ற கோடுகளைக் கொண்டுள்ளது. எனினும் மற்ற மையங்களில் வழங்கப்பட்ட சரியான வினாத்தாள்களுக்கு தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் q, r, s, t ஆகிய கோடுகள் வழங்கப்பட்டுள்ளன.


இதைப் பார்த்த மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதையும் வாசிக்கலாம்: EXCLUSIVE: ”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”- நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை