முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மொரிசனை ஒத்தைக்கு ஒத்தை வா என ட்விட்டரில் விவாதிக்க அழைத்துள்ள விவகாரம் சூடு பிடித்துள்ளது. மைக்கேல் ஜோனதன் ஸ்லேட்டர் - இவர் ஒரு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர். ஆஸ்திரேலிய அணிக்காக 90-களில் 74 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர்.



பிரபல கிரிக்கெட் வர்ணனையாளராகவும் வலம் வரும் இவர் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வர்ணனையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இந்தியாவில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை கண்ட சில உலக நாடுகள், இந்தியாவை ரெட் லிஸ்ட் செய்துள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டில் மே 15-ஆம் தேதி வரை இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் எல்லைகளை தாண்டி யாரும் வர அனுமதி கிடையாது. இதில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் எந்த முன்னுரிமையும் வழங்கப்படாது என்ற மொரிசனின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஐபிஎல் ஒத்தி வைப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னரே தொடரிலிருந்து வெளியேறிய மைக்கேல் ஸ்லேட்டர், இந்தியாவிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்ல இயலாது என்ற காரணத்தால், மாலத்தீவிற்கு சென்றார். ஆனால் அங்கிருந்து நாடு திரும்பவும் கதவுகள் அடைக்கப்பட்டதால், தாயகம் திரும்ப முடியாமல் மாலத்தீவில் தவித்து வருகிறார் ஸ்லேட்டர். 



ஆஸ்திரேலியாவின் சொந்த குடிமகன்களையே நாட்டிற்குள் அனுமதிக்காதது குறித்து அந்நாட்டு பிரதமரை கடந்த சில நாட்களாகவே ட்விட்டரில் வெளுத்து வாங்கி வருகிறார் ஸ்லேட்டர். "பிரதமரே உங்கள் கையில் ரத்தம் படிந்துள்ளது" என தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்லேட்டர் பதிவிட்டுள்ள கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது .






"உண்மையில் ஆஸ்திரேலிய அரசுக்கு, ஆஸ்திரேலிய வீரர்கள் நலனில் அக்கறை இருந்தால் எங்களை நாடு திரும்ப அனுமதிக்கட்டும். இது இழிவானது. பிரதமரே உங்கள் கைகளில் ரத்தம் படிந்துள்ளது. உங்களால் எப்படி எங்களை இவ்வாறு நடத்த முடிகிறது. அரசின் அனுமதி பெற்றே நான் ஐ.பி.எல் தொடரில் பணி மேற்கொள்ள சென்றேன், ஆனால் இன்று அரசு என்னை புறக்கணிக்கிறது" என்று முதலில் ட்விட்டர் பதிவிட்டார் ஸ்லேட்டர்.






அவரின் பதிவிற்கு சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் "பணம் சம்பாதிக்க சென்றேன் என்று விமர்சிப்பவர்களே, அதை மறந்து விடுங்கள். என் பிழைப்பிற்காக நான் வாழ இதை செய்து வருகிறேன். ஆனால் தொடரிலிருந்து முன்பே கிளம்பிய காரணத்தால் ஒரு ரூபாய் கூட நான் எடுத்து வரவில்லை. இந்தியாவில் இறந்துபோகும் ஆயிரக்கணக்கானவர்களை எண்ணிப் பாருங்கள். அதற்கு பேர் பச்சாதாபம். நம் அரசிற்கு சிறிதேனும் இருக்கிறதா" என்று பதிலளித்தார்.






அத்துடன் நிறுத்தி கொள்ளாத  ஸ்லேட்டர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் "இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்களின் பீதியும், பயமும் உண்மையானது. அதைத் தெரிந்துகொள்ள நீங்கள் ஏன் உங்கள் தனி விமானத்தை எடுத்துக்கொண்டு இங்கே வர கூடாது, வாங்கள் வந்து பாருங்கள் வீதியில் கிடக்கும் உயிரற்ற உடல்களை" என பிரதமரை அழைத்துள்ளார்.






மேலும் இந்தியாவின் நிலையை கண்டு "இந்தியர்களுக்கு எனது அன்பும் பிரார்த்தனையும். நான் இந்தியாவில் இருக்கும் அனைத்து நேரங்களிலும் என்னை சிறப்பாக வழி நடத்தினீர்கள். தயவு செய்து பத்திரமாக இருங்கள்"  என பதிவிட்டுள்ளார்.






இறுதியாக நேற்று பதிவிட்ட ஸ்லேட்டர் "என்னேரமும் உங்களுடன் விவாதம் செய்ய நான் தயார்" என பிரதமரை அழைத்துள்ளார். மைக்கேல் ஸ்லேட்டரின் கருத்துகளுக்கு பதிலளித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் "அபத்தமானது" என குற்றசாட்டுகளை மறுத்துள்ளார்.



இந்நிலையில் ஸ்லேட்டர் மட்டுமில்லை, இந்தியாவில் ஐபிஎல் 2021 தொடரில் பங்கேற்க வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கிளென் மாக்ஸ்வெல் என 14 வீரர்கள் உட்பட ஆஸ்திரேலியாவை சேர்ந்த 40 பேர் நாடு திரும்பமுடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் நாடு சென்று சேர பி.சி.சி.ஐ நிர்வாகம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் அணிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.