மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த தேர்விற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இருப்பினும், தமிழக அரசு மாணவர்களின் நலன்கருதி அரசு சார்பிலே பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையங்களின் கீழ் மாணவர்களுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு நீட் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தனியார் இணையதளம் ஒன்று மாணவர்களின் நலன் கருதி நீட் மாதிரி தேர்வு நடத்த உள்ளது. கொஸ்டின் கிளவுட்.இன் என்ற அந்த இணையதளத்தில் தமிழில் நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காக மாதிிரி நீட் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இணைய வழியில் நடத்தப்பட உள்ள இந்த மாதிரி நீட் தேர்வில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து வினாத்தாள்கள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களின் திறனை வளர்ப்பதற்காக அப்ஜெக்டிவ் டைப் முறையில் கேள்விகள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. தேர்வுகள் எழுதி முடித்தவுடன் மாணவர்களுக்கான மதிப்பெண்களும் திரையில் காட்டப்பட உள்ளது. அந்த மதிப்பெண்களின் விவரம் மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது அவர்களது ஆசிரியர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆளுங்கட்சியான தி.மு.க. கொண்டிருந்தாலும், நடப்பாண்டில் நீட் தேர்வு ரத்து என்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில பாடத்திட்டத்தின் கீழே மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பதும். இதுதொடர்பாக அவர் டெல்லி சென்று பிரதமரை நேரில் வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், செப்டம்பர் 12-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நீட் தேர்வுக்கு கடந்த சில மாதங்களாக தயாராகி வருகின்றனர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாணவர்கள் மும்முரமாக நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். செப்டம்பர் 12-ந் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால், தேர்விற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளதால் மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.