தேர்வுக் கட்டணம் என்ற பெயரில் நுழைவுத் தேர்வுகளுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் பணம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


நாடு முழுவதும் உயர் கல்வித்துறை படிப்புகள், பெரும்பாலும் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இவை தவிர்த்து சட்டம், வேளாண்மை, பட்டயக் கணக்காளர் உள்ளிட்ட பிற படிப்புகள் இருந்தாலும், அவை பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. 


இந்த சூழலில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர மத்திய அரசால் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், மத்திய மற்றும் மாநிலக் கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர அனைவருக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆகும். இதற்காக வைக்கப்படும் நீட் தேர்வை, தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. 


அதேபோல மத்திய அரசின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆகும். இந்தத் தேர்வு ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதேபோல மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் வழங்கும் இளங்கலைப் படிப்புகளில் சேர க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET), இந்த ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பக் கட்டணம் என்ன?


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு பொதுப்பிரிவு மாணவரும் ரூ.1,600 செலுத்த வேண்டியது கட்டாயம். ஓபிசி பிரிவினருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் ரூ.1,500 கட்டணம் ஆகும். எஸ்சி/ எஸ்டி பிரிவு மாணவர்கள் ரூ.900 செலுத்த வேண்டியது அவசியம். இந்தியாவுக்கு வெளியே உள்ள தேர்வு மையங்களில் எழுத விரும்பும் மாணவர்களுக்கு ரூ.3,000 கட்டணமாக உள்ளது. 




அதேபோல க்யூட்  (CUET) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ.650 செலுத்த வேண்டும். ஓபிசி பிரிவினருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் ரூ.600 கட்டணம் ஆகும். எஸ்சி/ எஸ்டி பிரிவு மாணவர்கள் ரூ.550 செலுத்த வேண்டியது அவசியம். 


ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.650 வசூலிக்கப்படுகிறது. இதுவே மாணவிகளுக்குப் பாதியாக ரூ.325 மட்டும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல பட்டியலின / பழங்குடி/ மாற்றுத்திறனாளி/ மாற்றுப் பாலின மாணவர்களுக்கும் ரூ.325 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 


இந்த நிலையில் நீட் தேர்வுக்கு இதுவரை 11.70 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மே 6ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல க்யூட் தேர்வுக்கு 4.71 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜேஇஇ மெயின் தேர்வுக்கு 9.6 லட்சம் பேர் விண்ணப்பித்து, விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 


கோடிக்கணக்கில் வசூல்


இந்தத் தேர்வுகளுக்கான வின்ணப்பக் கட்டணம் மூலம் தேசியத் தேர்வுகள் முகமை கோடிக்கணக்கான ரூபாயை வசூல் செய்துள்ளது என்று குற்றம் சாட்டுகிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. 




இதுகுறித்து 'ஏபிபி நாடு'விடம் அவர் கூறும்போது, ''ஒவ்வொரு மாணவரும் மத்திய அரசு நடத்தும் முக்கியமான நுழைவுத் தேர்வுகளை எழுத சுமார் 7 ஆயிரம் ரூபாயை செலவிட வேண்டியுள்ளது. கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு இது எந்த அளவு சாத்தியப்படும் என்று அரசு யோசிக்க வேண்டும். 


நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும். தேசியத் தேர்வு முகமை வருமானம் பார்க்கும் நிறுவனமாக இருக்கக்கூடாது. உயர் கல்வி எப்போதுமே குறைந்த செலவுடையதாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் இது தலைகீழாக உள்ளது. 


ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். இதன்மூலம் நுழைவுத் தேர்வுகளை நடத்தும் என்டிஏ, நீட் தேர்வு மூலம் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்கிறது. அதேபோல க்யூட் தேர்வுக் கட்டணம் மூலம், இதுவரை ரூ.28 கோடியைப் பெற்றுள்ளது. நீட் தேர்வுக்கும் க்யூட் தேர்வுக்கும் விண்ணப்பிக்க இன்னும் கால அவகாசம் இருப்பதால், இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கும். அதேபோல ஜேஇஇ தேர்வுகளுக்கான கட்டணம் மூலம், என்டிஏ 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. 


ஒரே நுழைவுக் கட்டணத்தை வசூலிக்கலாமே? 


ஒவ்வொரு தேர்வுக்கும் ஒவ்வொரு விதமான தேர்வுக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவது ஏன்? அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் ஒரே மாதிரியான, நியாயமான, குறைந்த அளவு கட்டணத்தை நிர்ணயிக்கலாமே? 


அதிக அளவிலான மாணவர்கள் ஒரு தேர்வை எழுதும்போது, அதற்கான கட்டணம் குறைவாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் நீட் தேர்வுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? ஜேஇஇ தேர்வைப்போல, நீட் தேர்வில் மாணவிகளுக்குத் தேர்வுக் கட்டணச் சலுகை வழங்கப்படாதது ஏன்? இவை தவிர்த்து நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மைய சந்தையில் 15 ஆயிரம் கோடிக்கு மேல் புழங்குகிறது. 


இவற்றின் மூலம் இந்திய நாட்டில் கல்வி என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானதா என்று கேள்வி எழுகிறது'' எனக் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.