நீட் தேர்வை ஆன்லைன் மூலம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்த தேசியத் தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், நேரடித் தேர்வாக நடைபெறும் என்றும், ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வு ஒத்திவைக்கப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். பொதுத்தேர்வை ரத்து செய்ததைபோல், நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.


இந்நிலையில், நீட் தேர்வை ஆகஸ்ட் 1ஆம் தேதி  ஆன்லைன் மூலம் நடத்த  தேசியத் தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு தொடங்குவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக, தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்படும். ஆனால், தேர்வுக்கு 45 நாட்கள் உள்ளதால், தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 


NEET Exam 2021: நீட் தேர்வு: பொதுமக்கள் கருத்துக்களை அனுப்பலாம் -உயர்நிலைக்குழு அறிவிப்பு


சமீபத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். “எந்தவொரு தொழில்முறை பாடத்திற்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும்" என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை முதலமைச்ச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது, நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ரத்துசெய்ய கோரிக்கை விடுத்திருந்தார், இதற்கிடையில், மருத்துவ சேர்க்கைகளில் நீட் ஏற்படுத்திய தாக்கத்தை ஆராய ஒரு குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழு இந்த விவகாரம் குறித்து பொதுமக்களின் கருத்தையும் கோரியுள்ளது.


நீட் தேர்வு நடைமுறை தமிழ்நாட்டில் உள்ளது


இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக சென்னையில் இன்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நீட் தேர்விற்கான பயிற்சி அரசு பள்ளிகளில் தொடர்ந்து கொடுக்கப்படும் என்றும், மத்திய அரசு நீட் தேர்வை நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பயிற்சி கொடுக்கப்படுகிறது எனவும் கூறினார். 




மேலும், அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு  வரப்பட்டு அரசு பள்ளிகளில் பயிற்சியும் நடத்தப்பட்டதாகவும், நீட் தேர்விற்கான பயிற்சியை அரசு பள்ளியில் நடத்துவதில் எந்த குழப்பமும் எதிர்கட்சி துணைத் தலைவர் பன்னீர் செல்வத்துக்கு தேவையில்லை என்றும் கூறினார்.


மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக கூறிய அமைச்சர், நீட் தேர்வுக்கான நடைமுறை இந்த நிமிடம் வரை உள்ளன இன்னும் விலக்கு கிடைக்கவில்லை என்றும், தேர்வு நடைமுறை உள்ளதால் வழக்கம்போல் மாணவர்கள் பயிற்சி எடுப்பதே சிறந்தது எனவும் கூறினார். 


CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?