நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக இருந்தது.  கடந்த 1ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது . மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த முடிவு தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "நீண்ட விவாதத்திற்கு பிறகு மத்திய அரசு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. இது நம் இளைஞர்களின் உடல் நலம் மற்றும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு" எனப் பதிவிட்டிருந்தார்.மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ 12வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 12 வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் 30:30:40 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதாவது, 10 மற்றும் 11 வகுப்பு மதிப்பெண்களுக்கு 30 சதவிகிதம் மதிப்பும், 12 வகுப்பு பிற தேர்வுகளில் எடுத்த மதிபெண்களுக்கு 40 சதவிகிதம் மதிப்பு வழங்கப்பட உள்ளது. 


புதிய முறை :



  • 30 சதவிகிதம் மதிப்பெண்கள் 10 வகுப்பில் மாணவ மாணவிகள் சிறந்த 3 பாடங்களின் மதிப்பெண்களில் இருந்து கணக்கிடப்படும்

  • 30 சதவிகிதம் மதிப்பெண்கள் 11 வகுப்பில் இறுதித் தேர்வு மதிப்பெண்களிலிருந்து கணக்கிடப்படும்.

  • 40 சதவிகிதம் மதிப்பெண்கள் 12 வகுப்பில் மாணவர்கள் தற்போது வரை எழுதிய பாடத் தேர்வுகள், செய்முறை தேர்வுகள் ஆகியவற்றிலிருந்து கணக்கிடப்படும். 


இவ்வாறு மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கிட அந்தந்தப் பள்ளிகள் ஒரு குழுவை அமைத்து மதிப்பெண்களை நிர்ணயித்து சிபிஎஸ்இக்கு அனுப்ப வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை சிபிஎஸ்இயின் மதிப்பெண் குழு ஆராய்ந்து இறுதி முடிவை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மாணவர்கள் அது தொடர்பாக முறையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 




அத்துடன் இந்த முறையில் வரும் மதிப்பெண்கள் திருப்தி இல்லை என்றால் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கொரோனா பரவல் சூழல் சரியான பிறகு எழுத்து முறை தேர்வு எழுதவும் வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த முறையில் அனைத்து பள்ளிகளிடமும் மதிப்பெண்களை பெற்று வரும் ஜூலை 31ஆம் தேதி சிபிஎஸ்இ 12 வகுப்பிற்கான இறுதி முடிவை அறிவிக்கும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. தற்போது நீதிமன்றம் வாயிலாக சிபிஎஸ்இ தேர்வுக்கான மதிப்பெண் விபரம் தெரியவந்திருக்கும் நிலையில், அதை எதிர்பார்ந்த மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


மேலும் படிக்க:  NEET Exam 2021: நீட் தேர்வு: பொதுமக்கள் கருத்துக்களை அனுப்பலாம் -உயர்நிலைக்குழு அறிவிப்பு