எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. தேசிய தேர்வு முகமைகள் சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் நடத்தப்படடு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நடத்தப்பட்டது.
இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 1-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத காரணத்தால் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். எனவே, நீட் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் ஜூலை 13-ம் தேதி மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே, இன்று மாலை ஐந்து மணியிலிருந்து செயல்படத் தொடங்கிய இணையதளத்தில், அதிக அளவில் மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டு https://t.co/2pimyQC2i3 என்ற இணையதளம் சிறிது நேரம் முடங்கி இருந்தது.
இணையதளம் முடங்கி இருந்ததால், மாணவ மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பதில் சிக்கல் நிலவுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, இந்த தேர்வால் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத அவல நிலை நீடித்து வருகிறது. நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலினால் தமிழ்நாட்டில் இதுவரை 13-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தி.மு.க.வினர் தங்களது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்து இருந்தனர். தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கடந்த ஜூன் மாதம், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டார்.இந்த குழு, ‘நீட் தேர்வின்' பாதிப்புகள் பற்றி மக்களிடம் கருத்துகளை கேட்டது. அதனை தொடர்ந்து, நீட் தேர்வு தாக்கம் குறித்த அறிக்கையை ஏ.கே ராஜன் தலைமையிலான குழு, முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் நாளை சமர்ப்பிக்க இருக்கிறது.