நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு வரும் செப்டம்பர் 9ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், தேர்வுக்கான மின்னணு அனுமதி சீட்டுகளை, தேர்வு தேதிக்கு மூன்று நாட்கள் முன்பிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று NDA முன்னதாக தெரிவித்திருந்தது. எனவே, வரும் செப்டம்பர் 9-ஆம் தேதியில் இருந்து தேசிய தேர்வு முகமையில் இணையதளத்தில் இருந்து நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுபற்றிய தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்ஃபோனில் குறுந்தகவல் மூலமாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.

  




நீட் (இளநிலை) தேர்வு 2021, 12 செப்டம்பர் 2021 அன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஜூலை 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெற்றது.


இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மதிப்பெண் முடிவுகளை மத்திய/மாநில அரசு முகமைகள் பயன்டுத்திக் கொள்ளலாம்.  B.Sc Nursing Home பாடப்பிரிவுக்கும் கூட நீட் தேர்வு மதிப்பெண் முடிவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநர் முன்னதாக தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேசி நீட்டிக்கப்பட்டது.   


NEET UG 2021: நீட் தேர்வு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு - விவரம் உள்ளே   


விண்ணப்பதாரர்கள் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் உள்ளிட்டவை) தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படாது.  தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்களை யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்ட / குற்றவியல்  ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 3-7 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.


மின்னணு வடிவிலான தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் அசல் அடையாள அட்டை எடுத்துவராத விண்ணப்பதாரர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  தேர்வுக்கூட அனுமதி சீட்டில் பார் கோடு தெளிவாக தெரியும் வகையில் இருக்க வேண்டும்.


கொரோனா நடத்தைமுறைகள்: 


சமுக இடைவெளி விதிகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 155-இல் இருந்து 198-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் 2020-ல் இருந்த 3862-ல் இருந்து அதிகரிக்கப்படும் என்று மத்திய கல்வி  அமைச்சர் தெரிவித்தார்.


மேலும், கோவிட்-19 விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, அனைத்து தேர்வர்களுக்கும் மையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்படும். உள்ளே வர மற்றும் வெளியே செல்ல தனித்தனி நேரங்கள், தொடர்பில்லா பதிவுமுறை, முறையான கிருமி நாசினி நடவடிக்கைகள், சமூக இடைவெளியுடன் கூடிய அமரும் வசதிகள் உள்ளிட்டவையும் உறுதி செய்யப்படும் என்றும் கூறினார். 


தமிழகத்தில் நீட் தேர்வு: 


தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான குழு, தனது அறிக்கையை ஜூலை 14-ஆம் தேதி  முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் வழங்கியது. 165 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக  ஏ கே ராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


பெரும்பாலான மக்கள் நீட் தேர்வை திரும்பப்பெற வேண்டுமென்று குழுவிடம் தெரிவித்திருப்பதாகவும், இந்த அறிக்கையில் குழு உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். ஏ.கே ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் ரத்து செய்ய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று திமுக முன்னதாக அறிவித்திருந்தது. 


அனிதாவின் இழப்பு.. நான்காம் ஆண்டு நினைவு.. சமூகவலைதளங்களை நனைக்கும் கண்ணீர்..!