நீட் போராளி அனிதாவின் நான்காவது ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. திருச்சி காந்தி காய்கறிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியின் மகளாக பிறந்த அனிதா, இந்தியாவில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ள மாணாக்கர்களின் கல்வி உரிமைக்காக போராடியவர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்த ரோகித் வெர்முலா மரணமும், நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அனிதாவின் மரணமும் பொது மனசாட்சிகளை உலுக்கியது 


        


10-ஆம் வகுப்பில் குழுமூர் அரசு பள்ளியில் படித்த அவர், 500 க்கு 480க்கும் அதிகமான மதிப்பெண்ணைப் பெற்றார்.இதன் காரணமாக, அரசு நிதிஉதவியோடு மேலமத்தூரில் உள்ள ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார்.    இவர் 2016-2017 கல்வியாண்டில் மார்ச் 2017 இல் நடைபெற்ற மேல்நிலைக் கல்வி பொதுத்தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்களும் நீட் தகுதித் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண்களும் பெற்றார். 


2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், தனது கனவான மருத்துவக் கல்வி படிப்பது சாத்தியமாகவில்லை என்ற கவலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி மாணவி அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம், ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. 


நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா? 


நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஆளும் திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தது. இதையடுத்து நீட் தேர்வு ரத்து குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வில் விலக்கு கோரி நடப்புக் கூட்டத்தொடரிலேயே சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். 


நீட் தேர்வு ரத்து குறித்து அதிமுகவின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த ஒ. பன்னீர்செல்வம், "பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு உள்பட அனைத்து படிப்புகளுக்குமான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதும், 'நீட்' தேர்வு உள்பட எந்தத் தேர்வும் அனுமதிக்கப்படக் கூடாது என்பதும் தான் அதிமுகவின்  நிலைப்பாடு. 'நீட்' தேர்வு உட்பட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தன் இறுதி மூச்சு வரை எதிர்த்தவர் ஜெயலலிதா.  


ஜெயலலிதாவின் நிலைப்பாடு தான் அதிமுகவின் நிலைப்பாடு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் அடிப்படையில்தான் நீட் தேர்வினை ரத்து செய்யும் வகையில், இரண்டு சட்டமுன்வடிவுகள் அதிமுக அரசால் 1-2-2017 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவை சட்டமாகாத சூழ்நிலையில், மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி, அதன் அடிப்படையில் ஏழை, எளிய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மருத்துவப் படிப்பினை படிக்க வழிவகை செய்தது அதிமுக அரசு.


 திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்பவும் சட்ட நடவடிக்கையை எடுக்காமல், மருத்துவச் சேர்க்கையில் 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைத்திருப்பது என்பது தாமதப்படுத்தும் செயல் என்று நான் ஏற்கெனவே எனது அறிக்கையின் வாயிலாக வெளியிட்டு இருந்தேன் என்பதை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை காரணம் காட்டி இந்தப் பிரச்சனையை தி.மு.க. நீர்த்துப் போகச் செய்கிறதோ என்ற ஐயம் பொதுமக்களிடையே நிலவுகிறது. இதன்மீது விரைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை" என்று தெரிவித்தார். 


இதற்கிடையே, சட்டப்பேரவையில் தனது முதல் உரையின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது முந்தைய அதிமுக அரசு பதிந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்"  என்று  கேட்டுக்கொண்டார்.