நேரடி தேர்வு மூலம் நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 5-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்தது. நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எனப்படும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெற இருந்து நீட் தேர்வு 2021 ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தேர்வுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று நேரத்தில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் நரேடந்திர மோடி தெரிவித்தார்.
பொதுத் தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும் "நீட்" போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று கருத்து தெரிவித் தமிழ்நாடு முதல்வர்," நடப்பாண்டில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலே மருத்துவ கல்வியில் சேர்வதற்கு அனுமதிக்க வேண்டும்"என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஏ.கே.ராஜன் குழுவுக்கு தடைகோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு அவகாசம்..!
இந்நிலையில், 2021 கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. அதில், செப்டம்பர் 5-ம் நாடு முழுவதும் நீட் தேர்வு நேரடி தேர்வாக நடத்தப்படும் என்று தெரிவித்தது. மேலும், நீட் தேர்வுக்கான பாடத் திட்டங்கள், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப செயல்முறை தொடங்கியதும் வெளியிடப்படும்.
முன்னதாக, மாணவர்களுடன் காணொளி மூலம் உரையாடிய மத்திய கல்வி அமைச்சர், " 2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை. எனினும், கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல், ஜேஇஇ, நீட் தேர்வுகளில் வினாக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
’நீட் தேர்வை ரத்து செய்வது தமிழ்நாடு அரசின் கடமை!’ - அன்புமணி ராமதாஸ்
மேலும், பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள சில வாரியங்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, 2021 நீட் (இளங்கலை) தேர்வுத் தாளிலும் ஜேஇஇ (மெயின்) தேர்வைப் போன்று வினாக்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்று கூறினார்.
ஜேஇஇ முதன்மை தேர்வில் மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் முன்னதாக மாற்றம் கொண்டு வரப்பட்டது.
நீட் தேர்வில் பொதுவாக மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். (இயற்பியியல், வேதியியல் தலா 45 கேள்விகள், உயிரியல் - 90 கேள்விகள்) கேட்கப்படும். எனவே, மாணவர்கள் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு கேள்விகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.