என்சிஇஆர்டி 10ஆம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து சில பாடங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 1800 விஞ்ஞானிகள், அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூட்டாக இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
நாடு முழுவதும் மத்திய, மாநிலக் கல்வி வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்தியக் கல்வி வாரியங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகவும், மாநிலக் கல்வி வாரியங்கள் தங்களுக்கு உகந்த வகையிலும் பாடத்திட்டங்களை உருவாக்குகின்றன. என்சிஇஆர்டி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் எஸ்சிஇஆர்டி மாநிலப் பாடத் திட்டத்தையும் பின்பற்றுகின்றன.
சில ஆண்டுகளுக்கு ஒரு முறை அவை பாடத்திட்டத்தைக் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றுகின்றன. சில பகுதிகளை நீக்கி, வேறு சில பகுதிகளைச் சேர்க்கின்றன. இந்த நிலையில், 10ஆம் வகுப்பு அறிவியல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து உயிரியல் பரிணாமக் கோட்பாடு (theory of biological evolution) பகுதி நீக்கப்படும் என்று என்சிஇஆர்டி தெரிவித்தது. அத்தியாயம் 9-ல், மரபு மற்றும் பரிணாமம் (Heredity and Evolution) என்னும் பாடம் மரபு என்ற பெயரில் (Heredity) மாற்றப்பட்டது.எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 1800 விஞ்ஞானிகள், அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ''உயிரியல் பரிணாமக் கோட்பாட்டைப் புரிந்துகொள்வது என்பது அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதில் முக்கியமானது. இதனால் கல்வியின் நோக்கமே கேலிக் கூத்தாகி விடும்'' என்று தெரிவித்துள்ளனர். Breakthrough Science Society என்னும் அறிவியல் தன்னார்வ அமைப்பு சார்பில், விஞ்ஞானிகள், அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூட்டாக இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
பாடத்திட்டத்தில் இருந்து பரிணாமக் கோட்பாட்டை விலக்குவதற்கு எதிரான மேல்முறையீடு (An Appeal Against Exclusion of Evolution from Curriculum) என்ற பெயரில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஐஐடி பேராசிரியர்கள், டாடா ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) மற்றும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) உள்ளிட்ட நிறுவன அறிவியலாளர்கள் சேர்ந்து இந்தக் கடிதத்தை எழுதி உள்ளனர்.
முகலாயர் பாடம் நீக்கம்
12ஆம் வகுப்பு வரலாறு புத்தகத்தில், இடைக் கால வரலாறு பகுதியில் உள்ள 'Kings and Chronicles' மற்றும் 'The Mughal Courts' ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. 2023- 24ஆம் ஆண்டு முதல் மாநிலப் பாடப் புத்தகங்களில் திருத்தப்பட்ட என்சிஇஆர்டி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சோஷியலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் காங்கிரஸின் ஆட்சி குறித்த பாடங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 11ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களின் பாடங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
2022-ல் நீக்கப்பட்ட பாடங்கள்
முன்னதாக, சிபிஎஸ்இ தன்னுடைய பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதாக 2022-ன் ஆரம்பத்தில் அறிவித்தது. அணிசேரா இயக்கங்கள், பனிப்போர் காலம், ஆப்ரோ-ஆசியப் பகுதிகளில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய பேரரசுகளின் வரலாறு மற்றும் தொழில்துறை புரட்சி பற்றிய அத்தியாயங்களை 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து சிபிஎஸ்இ நீக்கியது.
இதேபோல், 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில், 'உணவு பாதுகாப்பு' என்ற தலைப்பில் இருந்து, "உலகமயமாக்கலால் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம்" என்ற தலைப்பும் கைவிடப்பட்டுள்ளது. 'மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு' பகுதியில் ஃபைஸ் அகமது ஃபைஸின் உருது மொழியில் இரண்டு கவிதைகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பகுதிகளும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.