நவோதயா வித்யாலயா பள்ளிகளில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1,616 பணியிடங்கள்:
மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் பணிபுரிவதற்காக, பல்வேறு பிரிவுகளில் ஆசிரியர்கள் பயிற்சியளிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சியளிக்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இசை, கலை, விளையாட்டு, நூலகர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின் படி மொத்தமாக 1616 பணியிடங்கள் நவோதய வித்யாலயா சமிதி ஆள்சேர்ப்பு 2022 மூலமாக நிரப்பப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும், இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் நாளை ஜூலை 2ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக கணினி அடிப்படையிலான தேர்வுகளை நவோதய வித்யாலயா சமிதி நடத்தும். ஆனால், தலைமை ஆசிரியர் பொறுப்புகளுக்கான தேர்வு டெல்லி என்சிஆரில் மட்டுமே செயல்படும். தேர்வில் வெற்றிபெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்படுவார்கள். இத்தேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
எந்த பிரிவில் எத்தனை காலியிடங்கள்?
பணியிடங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வமல்லாத தகவலின் படி தலைமை ஆசிரியர் பொறுப்பிற்கு 12 பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில் உயிரியலுக்கு 42 பேரும், வேதியியலுக்கு 55 பேரும், வணிகவியலுக்கு 29 பேரும், பொருளாதாரத்திற்கு 83 பேரும், ஆங்கிலத்திற்கு 37 பேரும், புவியியலுக்கு 41 பேரும், இந்திக்கு 20 பேரும், வரலாற்றிற்கு 23 பேரும், கணிதத்திற்கு 26 பேரும், இயற்பியலுக்கு 19 பேரும், கணினி அறிவியலுக்கு 22 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதேபோல பயிற்சிபெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆங்கில ஆசிரியர்கள் 144 பேரும், இந்திக்கு 147 பேரும், கணிதத்திற்கு 167 பேரும், அறிவியலுக்கு 101 பேரும், சமூக அறிவியலுக்கு 124 பேரும், மூன்றாவது மொழிக்கு 343 பேரும், இசை ஆசிரியர் பொறுப்புக்கு 33 பேரும், கலை ஆசிரியர் பொறுப்புக்கு 43 பேரும், விளையாட்டு ஆசிரியரில் ஆண் பிரிவிற்கு 21 பேரும், பெண்கள் பிரிவில் 31 பேரும், நூலகர்கள் 53 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்படும் தலைமையாசிரியர்களுக்கு 78,800 ரூபாய் முதல் 2,09,200 ரூபாய் வரையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 44,900 ரூபாய் முதல் 1,42,400 ரூபாய் வரையும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 47,600 முதல் 1,51,100 ரூபாய் வரையும், மற்ற பிரிவு ஆசிரியர்களுக்கு 44,900 ரூபாய் முதல் 1,42,400 ரூபாய் வரை சம்பளமும் வழங்கப்படும்.
வயது வரம்பு:
இப்பொறுப்புகளுக்கான வயது வரம்புகளாக தலைமை ஆசிரியருக்கு அதிகபட்சமாக 50 வயதும், முதுநிலை ஆசிரியருக்கு 40 வயது, இளநிலை, கலை, விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் நூலகர்களுக்கு அதிகபட்சமாக 35 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
தலைமை ஆசிரியர் தவிர மற்ற பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு முதலில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் தேர்வாகிவிட்டால் சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கானத் தகுதிகள்:
தலைமை ஆசிரியர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பும், பி.எட் அல்லது அதற்கு நிகரான படிப்பும் 15 ஆண்டுகள் அனுபவமும் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை ஆசிரியர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்த பிரிவுக்கு விண்ணப்பிக்கிறார்களோ அந்த படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களும், பி.எட் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
இளநிலை ஆசிரியர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் பாடப்பிரிவில் 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்பை படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இசை ஆசிரியர் பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 5 ஆண்டுகள் இசைப்பயிற்சிப் பள்ளியில் படித்திருக்க வேண்டும் அல்லது இசையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 10வது மற்றும் 12வது படித்தவர்கள் கூடவே சங்கீத் விஷாரத் தேர்வு எழுதியிருந்தால் விண்ணப்பிக்கலம்.
கலை ஆசிரியர் பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 12ம் வகுப்பு மற்றும் வரகலை, ஓவியம், சிற்பக்கலை, கைவினை உள்ளிட்ட ஏதாவது ஒரு பிரிவில் 4 ஆண்டு டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அல்லது ஃபைன் ஆர்ட்ஸ் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பி.பி.எட் படிப்பில் பட்டம் பெற்றவர்கள் விளையாட்டு ஆசிரியர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
நூலகர் பொறுப்பிற்கு நூலக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது ஒரு வருட டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.