உயர் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோலவே உயர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கும், டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் இந்த விருதை வழங்க உள்ளார். 


என்ன விருது?


பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பிரதம மந்திரி இளைஞர் பயிற்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக ஐடிஐ, பாலிடெக்னிக் ஆசிரியர்கள் 25 பேருக்கு தேசிய ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. உயர் கல்வி நிறுவன ஆசிரியர்கள் 25 பேருக்கு தேசிய ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. உடன் சான்றிதழும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது.


எனினும் இது 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொறியியல் & தொழில்நுட்பம், கட்டிடக்கலை ஆசிரியர்கள் முதல் பிரிவாகவும், கணிதம், இயற்பியல், உயிரியல், ரசாயன அறிவியல், மருத்துவம், மருந்தகம்  உள்ளிட்ட முழுமையான அறிவியல் பிரிவு ஆசிரியர்களுக்கு (Pure Sciences) இரண்டாவது பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரிவின்கீழ், கலை மற்றும் சமூக அறிவியல், மனிதநேயம், மொழிகள், சட்ட ஆய்வுகள், வணிகம், மேலாண்மை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









* ஆசிரியர்கள் முழுநேரம் பணிபுரிபவராக இருக்க வேண்டும். 
* குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியும். 
* 55 வயதைக் கடந்தவர்களாக இருக்கக்கூடாது. 
* துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் விண்ணப்பிக்க முடியாது. 


விண்ணப்பிப்பது எப்படி?


ஆசிரியர்கள் nat.aicte-india.org என்ற இணைப்பை க்ளிக் செய்து, விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில், முன்பதிவு (Register) என்னும் பகுதியில், எந்த கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகிறீர்கள் என்பதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அதைக் குறிப்பிட்ட பிறகு கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து, முன்பதிவு செய்ய வேண்டும்.  


* ஆசிரியர்கள் https://nat.aicte-india.org/login என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 
* அதில், மெயில் ஐடி, கடவுச் சொல்லைப் பதிவிட்டு, லாகின் செய்ய வேண்டும். 
* பிறகு தேவையான விவரங்களை உள்ளிட்டு, விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 


விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று படிப்படியாக அறிந்துகொள்ள https://natapi.aicte-india.org/files/User_Manual_NTA.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.  


விண்ணப்பப் படிவத்தை முழுவதுமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். எந்த பகுதியையும் காலியாக விடக்கூடாது. அனைத்து விண்ணப்பங்களும் சுய சான்றிதழ் (self-attested documentary evidences) அளிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும். முழுவதுமாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் தகுதியற்றவையாகக் கருதப்பட்டு, நிராகரிக்கப்படும். 


தங்களுடைய சாதனைகள், செயல்பாடுகள் குறித்த 800 வார்த்தைகள் அடங்கிய ஆவணத்தையும் ஆசிரியர்கள் இணைக்க வேண்டும். 


முன்னதாக இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 30 கடைசித் தேதியாக இருந்தது. ஆசிரியர்களின் கோரிக்கையை அடுத்து, ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


விருது வழங்குவது குறித்தான விதிமுறைகளை விரிவாக அறிந்துகொள்ள https://natapi.aicte-india.org/files/Guidelines.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.