தமிழ்நாட்டைச் சேர்ந்த யுபிஎஸ்சி தேர்வர்கள் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


நான் முதல்வன் திட்டத்தின்கீழ் யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை 25,000 ரூபாயைப் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்.


மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் இந்தத் தேர்வின் மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் தேர்வை எழுத தமிழ்நாட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கும் என நடப்பு நிதியாண்டில் என தெரிவிக்கப்பட்டது. 


அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை இன்று தொடங்கி உள்ளது. முன்னதாக, இதுதொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நான் முதல்வன்  சிறப்புத் திட்ட இயக்குநர் ஊக்கத் தொகைக்கான வழிமுறைகளை வெளியிட்டார். 


அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.


இத்திட்டத்தின் தொடக்கமாக. ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2023ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத் தொகைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 


இந்த நிலையில் விண்ணப்பப் பதிவு இன்று (ஆகஸ்ட் 11) தொடங்கி உள்ளது.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


* தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் மட்டுமே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
 
* 2023ஆம் ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மட்டுமே உதவித்தொகை வழங்கத் தகுதியானவர்கள் ஆவர்.


* கடந்த ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் யாரும் விண்ணப்பிக்க முடியாது. 


யுபிஎஸ்சி தேர்வர்கள் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்.


கூடுதல் விவரங்களுக்கு- Email: nmcegrievances@naanmudhalvan.in  
தொலைபேசி எண்கள்: 9043710214 / 9043710211