நான் முதல்வன் திட்டத்தின் கீழ்  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை வழங்குதல் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழு மே 6ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. 


நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 10, 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய/ எழுதாத/ பள்ளி இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியைத் தொடர முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடத்தப்பட உள்ளது.


"நான் முதல்வன்- திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட இருக்கும் பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல், ஆலோசனை வழங்குதல் குழு (Career Guidance Cell) மே 6ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத / பள்ளி தொடர் வருகை தராத / பள்ளி இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியைத் தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குகின்ற வகையில் தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரிய தலைமையில் முன்னாள் மாணவர்கள் ஆதரவு பெறவும், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களை வலுப்படுத்தவும், கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் வழிகாட்டலில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து செயல்படவும், பயிற்சிகள் வழங்கவும் மாநிலக் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் 18.04.2023 மற்றும் 19.04.2023 சென்னையில் நடைபெற்றது.


மாவட்ட அளவிலான பயிற்சி


இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான பயிற்சிகள் வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மே மாதம் 5ஆம் தேதி வரை மாணவர்களின் நலன் மற்றும் முழு வளர்ச்சியில் வெவ்வேறு பங்குரிமையர்களான (Stakeholders) ஒவ்வொரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் உள்ள தலைமையாசிரியர், உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளர், பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் முதுநிலை விரிவுரையாளர்கள் (DIET Faculties) வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) மற்றும் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மாணவர்கள் (NSS Programme Officers Students) ஆகியோர் இணைந்து செயல்பட உள்ளனர்.


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், பள்ளிக் கல்வித் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் (முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக) ஆகியோருக்கு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.