நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருப்பதாக முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு அமைத்த முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நிகழ்ந்தது. அதில் பேசிய ஏ.கே.ராஜன், ‘நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது. வேண்டும் என வெகுசிலர் மட்டுமே கூறியுள்ளனர்.நீட் தேர்வு பாதிப்புகள் தொடர்பான மேலும் சில கோப்புகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அவை கிடைத்தவுடன் தேர்வு குறித்த முடிவுகளை குழு அரசுக்குத் தெரிவிக்கும்.அரசு கேட்டுள்ள விளக்கங்களுக்கு மட்டுமே குழு பதில் அளிக்கும்’ என அவர் கூறினார். இதுவரை  25000 கடிதங்கள் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வந்திருப்பதாக முன்னாள் நீதிபதி ராஜன் குறிப்பிட்டார். 

முன்னதாக  நீட் தேர்வு தொடர்பான கருத்துக் கேட்புக்காக வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில், "தமிழ்நாடு அரசால் நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் தங்களின் கருத்துரைகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மருத்துவக் கல்வி இயக்குநகரத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப் பெட்டியில், வரும் 23.06.2021க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Also Read : அனல் கக்கும் பேச்சு.. நேர்கொண்ட பார்வை.. யார் இந்த ரகுராம் ராஜன்